பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நேற்றிரவு ரூ268. 50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண் ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர்.



கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ6. 46ம், டீசல் ரூ7. 52ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் பெட்ரோல் 31 காசு, டீசல் 34 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ106. 04க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 31 காசுகள் அதிகரித்து ரூ106. 35க்கும், டீசல் விலை லிட்டர் ரூ102. 26க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 34 காசுகள் அதிகரித்து ரூ102. 60க்கும் விற்பனையாகிறது. சேலத்தில் நேற்று பெட்ரோல் ரூ106. 36க்கு விற்ற நிலையில் 31 காசுகள் அதிகரித்து ரூ106. 67க்கும், டீசல் லிட்டர் ரூ102. 60க்கு விற்ற நிலையில் 34 காசுகள் அதிகரித்து ரூ102. 94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் லாரி வாடகை, ஆட்டோ கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை தடுக்க பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நேற்றிரவு வர்த்தக காஸ் சிலிண்டர்
விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ694 ஆகவும், சென்னையில் ரூ710 ஆகவும் இருந்தது.



பின்னர், ஒவ்வொரு மாதமும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் (அக்டோபர்) 1ம் தேதி டெல்லி, மும்பையில் ரூ884. 50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ911 ஆகவும், சென்னையில் ரூ900. 50 ஆகவும் விற்கப்பட்டது. 6ம் தேதி திடீரென வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ15 அதிகரித்தனர்.

இதனால், டெல்லி, மும்பையில் ரூ899. 50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ926 ஆகவும், சென்னையில் ரூ915. 50 ஆகவும், சேலத்தில் ரூ933. 50 ஆகவும் அதிகரித்தது. இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான (நவம்பர்) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்றிரவு வெளியிட்டது.



இதன்படி, 14. 2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலை டெல்லி, மும்பையில் ரூ899. 50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ926 ஆகவும், சென்னையில் ரூ915. 50 ஆகவும், சேலத்தில் ரூ933. 50 ஆகவும் விற்கப்படுகிறது. அதே வேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ268. 50 அதிரடியாக அதிகரித்து அறிவித்துள்ளது.

இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ1865க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ரூ268. 50 அதிகரித்து, ரூ2,133. 50 ஆக உயர்ந்துள்ளது.

சேலத்தில் வர்த்தக சிலிண்டர் கடந்த மாதம் ரூ1822. 50க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ268. 50 உயர்ந்து ரூ2,091 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதேபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ260 முதல் ரூ270 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்வீட், பலகாரம் விற்பனை களை கட்டியுள்ளது. இதனை செய்ய பலகார கடை உரிமையாளர்கள் வர்த்தக காஸ் சிலிண்டர்களையே பயன்படுத்துகின்றனர்.



இதன்விலை தற்போது ஒரேநேரத்தில் ரூ268. 50 அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒரு சிலிண்டரின் விலை ரூ2100ஐ கடந்து விட்டது. இதனால், பலகார கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிலிண்டர் விலையேற்றத்தின் காரணமாக இனிப்பு உள்ளிட்ட அனைத்து பலகாரங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர், தீபாவளி பண்டிகை முடிந்த ஓரிரு நாளில் விலையேற்றம் மேற்கொள்ள வாய்ப்பிருப்ப தாகவும், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பழனிசாமி கூறியதாவது: ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சமையல் எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த சில மாதமாக காஸ் சிலிண்டர் விலை ஏற்றப்பட்டு வருகிறது. நடப்பு மாதம் காஸ் சிலிண்டர் ரூ268. 50 அதிகரித்துள்ளது.

ஒரு சிலிண்டர் ரூ2100ஐ கடந்து விட்டது. நாங்கள் பொதுமக்கள் நலன் கருதி இதுநாள் வரை உணவுப்பொருட்களின் விலையை ஏற்றவில்லை.

இதேநிலை தொடர்ந்தால் கட்டாயம் உணவுப்பொருட்கள் விலையை ஏற்றும் நிலைக்கு தள்ளப்படுவோம். அந்த நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் ஒன்றிய அரசு காஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

விரைவில் போராட்டம் லாரி உரிமையாளர் அறிவிப்பு
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனராஜ் கூறுகையில், `தமிழகத்தில் 4 லட்சத்து 65 ஆயிரம் லாரிகள் ஓடுகிறது. இத்தொழிலை நம்பி 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

சமீப காலமாக டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

டீசல் உயர்வை காரணம் காட்டி நாங்கள் இதுநாள் வரை லாரி வாடகையை உயர்த்தவில்லை.

வாடகையை உயர்த்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

அந்த நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளி விடக்கூடாது. எனவே, டீசல் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்.


.

மூலக்கதை