586 நாட்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர் உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
586 நாட்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர் உற்சாகம்

* முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் நேரில் வாழ்த்து

சென்னை: கொரோனா தொற்றால் மூடப்படு பின்னர் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன.   முதல்வர் மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பூங்கொத்து, பரிசுப் பொருட்கள் கொடுத்து மாணவ, மாணவியரை வரவேற்றனர். பாடப்புத்தகங்கள், கிருமி நாசினி, முகக் கவசங்களும் வழங்கப்பட்டன.

கடந்த 2020 மற்றும்  2021ம் ஆண்டுகளில் ஏற்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சுகாதார நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்றின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியது.



இதையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10 பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக பள்ளிகள் திறக்கவும் அரசு முடிவு செய்தது.

அதன்பேரில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. கொரோனா தொற்று தொடர்பாக அரசு ஏற்கெனவே வெளியிட்ட நிலையான பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.   இந்நிலையில், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.



ஏற்கெனவே 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கின்ற மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அந்த மாணவர்களுக்கும், தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கு வரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு அரை மணி நேரம் இடைவெளியில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கு பள்ளிக்கு வரும் தொடக்க நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதால், இன்று பள்ளிக்கு வரும் மாணவர்களை வர வேற்க அந்தந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்,  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவ, மாணவியரை வரவேற்றனர்.



இதற்காக காலை 8. 30 மணிக்கே அவர்கள் பள்ளிகளுக்கு வந்து அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும், தூய்மைப்பணிகளையும் பார்வையிட்டனர். பின்னர் பள்ளிக்கு வந்த 1 முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு  பூங்கொத்து கொடுத்தும்,  பரிசுப் பொருட்கள் கொடுத்தும் வரவேற்றனர்.

இதனால் மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர்.   இன்று பள்ளிக்கு வரும் சுமார் 34 லட்சம்  மாணவ மாணவியர் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இன்று பள்ளிகளிலும் முகக் கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டன.   பள்ளியின் நுழைவாயிலில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன்செய்து, கைகளுக்கு கிருமி நாசினி தெளித்து,  வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்பட்டனர்.

இன்று பள்ளிக்கு வந்த  மாணவ மாணவியருக்கு பாடங்கள் நடத்தாமல்,  கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி உற்சாகப்படுத்தினர்.

இது  தவிர, மன மகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், புத்தாக்கப் பயிற்சி கட்டங்கள், முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள், போன்றவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு 15 நாட்களுக்கு கதை, பாடல் விளையாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியும் அளிக்கப்படும்.

இதற்கு பிறகு முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் நடத்தப்படும்.

தனியார் பள்ளிகளை பொருத்தவரையில் 4726 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.   தனியார் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்கள், இணை இ யக்குநர்கள் தலைமையில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பள்ளிக்கு வரும் மாணவ மாணவியரை வரவேற்க  வேண்டும் என்று அரசு அறிவித்து விட்டதால், அந்தந்த தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த பகுதியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இன்று காலையில் பள்ளிகளுக்கு வந்தனர்.



சென்னை, கிண்டி மடுவன்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வு ெசய்தார். அப்போது ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மாணவர்களை உற்சாகப்படுத்தி, பரிசுப் பொருட்களை வழங்கினார். அதேபோல, திருவல்லிக்கேணியில் உள்ள  லேடி வெலிங்டன் பள்ளிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு, கல்வி அதிகாரிகள் இன்று காலை 9 மணி அளவில் வந்தனர்.

அவர்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்தும்,  இனிப்பு வழங்கியும், பரிசுப் பொருட்கள் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும்,  பாடப்புத்தகங்கள், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள், உள்ளிவற்றை வழங்கினர்.



அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: ஒன்றாம் வகுப்பு  முதல் எட்டாம் வகுப்புகளுக்கு இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி மேனிலைபள்ளிக்கு வந்துள்ளோம்.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் நானும் நாடாளு மன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் இங்கு வந்துள்ளோம். பள்ளிக்கு வருகின்ற மாணவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.   சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முகச் கவசங்கள், சானிடைசர்கள், உள்ளிட்ட பொருட்களை அவர் வழங்கியுள்ளார்.

அதன்படி  முதன்மைக் கல்வி அலுவலரிடம் கொரோனா தடுப்பு பொருட்களை நாங்கள் வழங்கினோம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், உற்சாகம் அடைந்துள்ளனர்.

மாணவர்களைப் போலவே நானும் பள்ளிக்கு வந்ததால் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

குன்றத்தூரில் உள்ள பள்ளிக்கு அமைச்சர் தா. மோ. அன்பரசனும், சென்னை சைதாப் பேட்டை பெண்கள் மேனிலைப்  பள்ளிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்றார், சென்னை வால்டாக்ஸ் சாலையில்  உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் சென்று மாணவர்களை சந்தித்து பரிசுப் பொருட்களை கொடுத்து உற்சாகப்படுத்தினர். மேலும், ஆயிரம் விளக்கு சட்ட மன்ற தொகுதியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை எம்எல்ஏ எழிலன் வரவேற்று இனிப்புகள் வழங்கினார்.



இதன் படி, ராமா தெரு நடுநிலைப்பள்ளி, கோபாலபுரம் ஆண்கள் மேனிலைப் பள்ளி, கர்நாடக சங்க மேனிலைப் பள்ளி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேனிலைப்பள்ளி, சூளைமேடு சென்னை  ஆண்கள் மேனிலைப் பள்ளி, சங்கராபுரம் சென்னை தொடக்கப் பள்ளி, ஹோபார்ட் அரசினர் பெண்கள் மேனிலைப்பள்ளி, உள்ளிட்ட பள்ளிகளுக்கு சென்று இனிப்பு வழங்கியும், பாடப்புத்தகங்கள் வழங்கியும் மாணவ மாணவியரை வரவேற்றார். இதையடுத்து,  எழும்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிக்கு எம்எல்ஏ பரந்தாமன் சென்றார்.

இதேபோல மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகளை அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

.

மூலக்கதை