காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்

சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தை, முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். டெல்லியில்  கடந்த 25ம் தேதி நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு, கலையுலகின் உயரிய விருதான  தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

விருதினைப்  பெற்ற அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி  ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இந்நிலையில் அவர், கடந்த 28ம் தேதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த், வழக்கமான பரிசோதனைக்காகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும் அவரை மருத்துவமனையில் சந்தித்த நடிகர் ஒய். ஜி. மகேந்திரனும் இதை  உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் விரைவில் குணமடைய சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்த் உடல்நிலை தேறியுள்ளதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு ரஜினிக்கு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர், தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக பதிவிட்டிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்கள் எடுத்து கூறினர்.

ரஜினிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி முதல்வர் மு. க. ஸ்டாலின் மருத்துவர்களிடம் கூறினார். ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.


.

மூலக்கதை