கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை; நவ.26ம் தேதிக்கு ஒத்திவைப்பு: நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை; நவ.26ம் தேதிக்கு ஒத்திவைப்பு: நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவு

ஊட்டி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை துவங்கியது. கோர்ட்டில் குற்றவாளிகள் சயான் மற்றும் வாளையார் மனோஜ், உதயகுமார் ஆஜராகினர்.

மேலும் பலரிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா வழக்கு விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

இங்க் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்தது.

அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு பங்களாவிற்குள் நுழைந்த கும்பம் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், இதர பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சயான் உட்பட 10 பேரை சோலூர்மட்டம் போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவ்வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில் தன்னை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என குற்றவாளி சயான் கேட்டுக் கொண்டார்.

அதேபோல் அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இவ்வழக்கு விசாரணையை தனிப்படை போலீசார் மீண்டும் துவக்கி நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சயான் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து கனகராஜின் அண்ணன் தனபால், அவரது மனைவி மற்றும் மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் உட்பட 30க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.



இவ்வழக்கு தொடர்பாக ஊட்டி மாவட்ட கோர்ட்டில் கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதை தொடர்ந்து வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணை தொடடங்கியது குற்றவாளிகள் சயான் , வாளையார் மனோஜ், உதயகுமார் ஆஜராகினர்.

மற்ற 7 பேர் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் ஆஜராகினர். நீதிபதி சஞ்சய் பாபாவிடம், மேலும் பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளதால் கால அவகாசம் வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர்.

இதை அடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார்.

.

மூலக்கதை