உயர்சாதி ஏழைகள் இடஒதுக்கீடு வழக்கு: நீட் தேர்வு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை

தினகரன்  தினகரன்
உயர்சாதி ஏழைகள் இடஒதுக்கீடு வழக்கு: நீட் தேர்வு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: உயர்சாதி ஏழைகள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு முடியும் வரை முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர் சாதி ஏழைகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு 24ஆம் தேதி முதல் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் முறையிட்டார். இதனை பரிசீலித்த நீதிபதிகள் உயர் சாதி ஏழைகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை விசாரித்து முடிக்கும் வரை முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை தொடங்க கூடாது என உத்தரவிட்டனர்.உயர் சாதி ஏழைகளுக்கான வருவாய் வரம்பு தொடர்பாக அண்மையில் ஒன்றிய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் வரும் 28ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை