அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சூடான் பிரதமர்?..அமைச்சர்களும் கைது என தகவல்..!!

தினகரன்  தினகரன்
அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சூடான் பிரதமர்?..அமைச்சர்களும் கைது என தகவல்..!!

சூடான்: சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டொக் அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடான சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த உமர் அல் பஷீர் கடந்த 2019ம் ஆண்டு பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் பதவி விலகினார். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் ராணுவம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து அப்துல்லா ஹம்டொக் பிரதமராக பதவியேற்றார். ராணுவமே ஆட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் நாடு மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான அரசியல் நெருக்கடியில் இருப்பதாக பிரதமர் அப்துல்லா ஹம்டொக் அண்மையில் கருத்து தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், இடைக்கால அரசைக் கவிழ்க்க முயற்சிகள் நடைபெற்றன. இராணுவத்தில் உள்ள அல் பஷீரின் விசுவாசிகள் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் இடைக்கால அரசில் விரிசலை ஏற்படுத்தின. இதனிடையே அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் பிரதமர் அப்துல்லா ஹம்டொக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் 4 அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூடான் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை