இந்தியே இந்தியாவின் தேசிய மொழி!: சொமேட்டோவை தொடர்ந்து மொழி சர்ச்சையில் சிக்கிய கே.எஃப்.சி.. #RejectKFC என டிரெண்ட் செய்யும் கன்னடர்கள்..!!

தினகரன்  தினகரன்
இந்தியே இந்தியாவின் தேசிய மொழி!: சொமேட்டோவை தொடர்ந்து மொழி சர்ச்சையில் சிக்கிய கே.எஃப்.சி.. #RejectKFC என டிரெண்ட் செய்யும் கன்னடர்கள்..!!

பெங்களூரு: இந்தியாவின் தேசிய மொழி இந்தி தான் என கூறிய கே.எஃப்.சி. ஊழியருக்கு கண்டனம் தெரிவித்து #RejectKFC என்ற ஹேஷ்டேக்கை கன்னடர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். கர்நாடகாவில்  உள்ள கே.எஃப்.சி. விற்பனை மையம் ஒன்றில் இந்தி பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இந்தி பாடல் ஒலிபரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு கர்நாடகாவில் உள்ள மையம் என்பதால் கன்னடம் பாடலை ஒலிபரப்புமாறும் வலியுறுத்தினார். இதனை ஏற்க மறுத்த கே.எஃப்.சி. நிறுவன ஊழியர், இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என்று தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து கே.எஃப்.சி. நிறுவன ஊழியரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதை கண்டித்து #RejectKFC என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வரும் கன்னடர்கள், இந்தியாவில் உள்ள மாநில மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக தமிழ்நாட்டை சேர்ந்த வாடிக்கையாளரிடம் சொமேட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், ஊழியரின் நடவடிக்கைக்காக சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை