போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்டு பேரம்: முக்கிய சாட்சி பரபரப்பு தகவல்

தினகரன்  தினகரன்
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்டு பேரம்: முக்கிய சாட்சி பரபரப்பு தகவல்

மும்பை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கானை விடுவிக்க சில அதிகாரிகள் நடிகர் ஷாரூக்கானிடம் ரூ.25 கோடி கேட்டு பேரம் பேசியதாகவும், பின்னர் இது ரூ.18 கோடி என இறுதி செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கின் முக்கிய சாட்சி ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். இந்த சாட்சியிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே, 10 வெற்று பேப்பரில் கையொப்பம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி மும்பை அருகே சொகுசு கப்பலை தேசிய போதை தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்து, நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் பின்னர் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஷரூக்கானின் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும் பின்னர் அது ரூ.18 கோடியாக குறைக்கப்பட்டதாகவும், இதில் ரூ.8 கோடி சமீர் வாங்கடேவுக்கு தரப்பட்டிருக்க வேண்டும் என்றும் என்று முக்கிய சாட்சி ஒருவர் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.  ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட போதை பொருள் வழக்கில் 9 சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் கிரண் கோசாவி முக்கியமான சாட்சியாகும். இவரது பெயர் 9வது சாட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கோசாவி மீது ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கோசாவியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட வழக்கில் கோசாவியின் பெயர் 9வது சாட்சியாகவும் அவருடைய டிரைவரும் மெய்க்காப்பாளருமான பிரபாகர் ரகோஜி செயிலின் பெயர் 5வது சாட்சியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபாகர் செயிலின் பிரமாண பத்திரம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது: நான் கோசாவியின் டிரைவராகவும், மெய்க்காப்பாளராகவும் இருக்கிறேன். கடந்த 1ம் தேதி இரவு 9.45 மணிக்கு கோசாவி என்னை அழைத்தார். நான் மறு நாள் காலை 7.30 மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மறு நாள் காலை 7.35 மணிக்கு கோசாவி என்னை அழைத்தார். எனது வங்கி கணக்கிற்கு ரூ.500 அனுப்புவதாகவும், தான் இருக்கும் இடத்தை மேப்பில் குறித்து வாட்ஸ் ஆப்பில் அனுப்புவதாகவும் தெரிவித்தார். நான் 8.45 மணிக்கு சிஎஸ்டி ரயில் நிலையத்துக்கு வந்து விட்டேன். அவர் அனுப்பியிருந்த இடத்தை பார்த்தபோது, என்சிபி (போதைப்பொருள் தடுப்பு பிரிவு) அலுவலகம் என காண்பித்தது. அங்கு டாக்சியில் சென்றேன். டிரைவரிடம் கேட்டபோது, கோசாவி என்சிபி அலுவலகத்தில் உள்ளதாக கூறினார். மறுநாள் காலை 10 மணிக்கு டிரைவரை அழைத்த கோசாவி, என்சிபி அலுவலகத்துக்கு என்னை அழைத்து வருமாறு கூறினார். என்னை அங்கு காத்திருக்கச் சொன்னார்கள். பின்னர் மதியம் 12 மணியளவில் என்னை துறைகமுகத்தில் கப்பலில் ஏறும் இடத்துக்கு அருகே காத்திருக்குமாறு கூறினார்கள். குளிர்பானம், தண்ணீர், பிராங்கி ரோல் உள்ளிட்ட சிலவற்றை வாங்கி வர கூறினார்கள். அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றேன். அங்கு சமீர் வாங்கடேயும் சில ஊழியர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு இவற்றை விநியோகித்தேன்.மதியம் 1.23 மணியளவில், கோசாவி சில புகைப்படங்களை அனுப்பினார். நானும் அங்கு சென்ற போது கப்பலில் ஏறும் இடத்தின் அருகே நிற்கச் சொன்னார்கள். மேலும், வாட்ஸ் ஆப்பில் சில படங்களை அனுப்பி, அதில் இருப்பவர்கள் கப்பலில் ஏறும் போது அவர்களை அடையாளம் காட்டச் சொன்னார்கள். இரவு 11.30 மணிக்கு கப்பலில் ஏறும் போர்டிங் தளத்துக்கு வருமாறு கோசாவி என்னை அழைத்தார். நானும் அங்கு சென்றேன். போர்டிங் தளத்தில் உள்ள ஒரு கேபினில் ஆர்யான் கானையும் முன்மும் தமேச்சா என்ற பெண்ணையும் பார்த்தேன். அவர்களுடன் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிலரையும் பார்த்தேன்.ஆர்யான் கானும் மற்றவர்களும் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் கோசாவியும், சமீர் வாங்கடேயும் 10 வெற்று பேப்ர்களில் என்னை கொயொப்பமிடச் செய்தனர். பின்னர் கோசாவி சாம் டிசவுசா என்பவரை சந்தித்தார். பின்னர் கோசாவி ஒரு காரிலும் சாம் வேறு ஒரு காரிலும் லோயர் பரேல் நோக்கி சென்றனர். நான் கோசாவி இருந்த காரில் அவருடன் பயணம் செய்தேன். அப்போது சாமுடன் கோசாவி போனில் பேசினார். போனில் பேசும் போது ஷாரூக்கானின் மகனை விடுவிக்க சில அதிகாரிகள் ரூ.25 கோடி கேட்பதாகவும் அது பெரிய தொகை என்றும் கோசாவி கூறினார். பின்னர் ரூ.18 கோடிக்கு பேசி முடிக்கலாம் என்றும் இதில் ரூ.8 கோடியை போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல் இயக்குனர் சமீர் வாங்கடேவுக்கு கொடுக்க வேண்டும் என்று சாமிடம் கோசாவி கூறினார். அன்று மாலை கோசாவியும், சாமும், நடிகர் ஷாரூக்கானின் மானேஜர் பூஜா தத்லானியும் ஒரு காரில் அமர்ந்து 15 நிமிடங்கள் பேசினார்கள். மேலும் பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று அங்கு கொடுக்கப்படும் பணத்தை வாங்கி வருமாறு எனக்கு சொல்லப்பட்டது. நானும் அந்த ஓட்டலுக்கு சென்ற போது, அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வெள்ளை காரில் இருந்தவர்கள் இரண்டு பேக்குகளை என்னிடம் தந்தனர். அதில் ரூ.50 லட்சம் இருந்ததாக நான் நம்பவைக்கப்பட்டேன். நான் அந்த பேக்குகளை டிரைடெண்ட் ஓட்டலில் வைத்து சாமிடம் கொடுத்தேன். எண்ணிப்பார்த்த போது அந்த இரு பைகளிலும் ரூ.50 லட்சத்துக்கு பதில் ரூ.35 லட்சம் மட்டுமே இருந்தது. கோசாவி தலைமறைவாகிவிட்டார். அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். நான் எனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சுகிறேன். இதனால்தான் பிரமாண பத்திரத்தை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த வழக்கில் கைதான ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்யன் கான் ஜாமீன் மனுவை முதலில் மாஜிஸ்திரேட் கோர்டும் பின்னர் சிறப்பு நீதிமன்றமும் நிராகரித்துவிட்டன. இதனை தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது 26ம் தேதி ஐகோர்ட் விசாரணை நடத்த உள்ளன.சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க கோரிக்கைரூ.25 கோடி பேரம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நவாப் மாலிக் கூறியதாவது: கடந்த ஓராண்டாக, திட்டமிட்ட குற்றச்செயல்கள் நடந்து வருகின்றன. இரண்டு வழக்குகள் விசாரணையில் உள்ளன. ஆனால் இவற்றில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இருப்பினும், பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது. பொய் வழக்குகள் போடப்பட்டு மக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பணம் பேரம் பேசப்படுகிறது. இது பற்றி விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளி வரலாம். எனவே ரூ.25 கோடி கேட்டது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம். இவ்வாறு அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.களங்கப்படுத்தும் நோக்கத்தை நிரூபிக்கிறதுபிரபாகர் செயில் கூறிய குற்றச்சாட்டு குறித்து போலீசார் தாங்களாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கோரியுள்ளார். இந்த போதை பொருள் வழக்கு மகாராஷ்டிரா அரசை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு போடப்பட்டுள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். அது உண்மை போலவே இருக்கிறது. இவ்வாறு சஞ்சய் ராவுத் டிவிட்டரில் கூறியுள்ளார்.போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி மறுப்புபிரபாகர் செயில் 6ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. ஆனால் பிரபாகர் செயில் கூறிய குற்றச்சாட்டை சமீர் வாங்கடேயும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு வட்டாரங்களும் மறுத்தன. இந்த பிரமாண பத்திரம் குறித்து கோர்ட் விசாரணை நடத்தும் போது தக்க பதில் அளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். பின்னர், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஜெனரல் முத்தா அசோக் ஜெயின் வெளியிட்ட அறிக்கையில், ‘குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட அக்டோபர் 2ம் தேதி, பிரபாகர் தனது நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார். வழக்கின் முக்கிய சாட்சி என்ற வகையில், இவர் தான் கூற வேண்டியதை நீதிமன்றத்தில்தான் தெரிவிக்க வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. போதை தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடேயும் இவற்றை மறுத்துள்ளார். இந்த பிரமாண பத்திரத்தை, மேல் நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கிேறன்’ என கூறியுள்ளார். சமீர் வான்கடே மாலத்தீவுக்கும், அபுதாபிக்கும் சென்று அங்கு வைத்து இந்திய சினிமா பிரபலங்களிடம் பணம் வசூல் செய்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் கூறியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை சமீர் வான்கடே மறுத்திருந்தார்.இந்த நிலையில் வலுவான ஆதாரம் இல்லாமல் ஒன்றிய அதிகாரி சமீர் வான்கடே மீது அமைச்சர் நவாப் மாலிக் இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறியிருக்க மாட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஜெய்ந்த் பாட்டீல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தன் மீது பொய் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மும்பை போலீஸ் கமிஷனருக்கு சமீர் வான்கடே கடிதம் எழுதியுள்ளார்,

மூலக்கதை