5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை: அசலங்கா - ராஜபக்சா அதிரடி

தினகரன்  தினகரன்
5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை: அசலங்கா  ராஜபக்சா அதிரடி

ஷார்ஜா: வங்கதேச அணியுடனான உலக கோப்பை டி20 சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பிரிவு 1), டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முகமது நயிம், லிட்டன் தாஸ் இருவரும் வங்கதேச இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. தாஸ் 16 ரன் எடுத்து லாகிரு குமாரா பந்துவீச்சில் ஷனகா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஷாகிப் ஹசன் 10 ரன் மட்டுமே எடுத்து கருணரத்னே வேகத்தில் கிளீன் போல்டானார். முகமது நயீம் - முஷ்பிகுர் ரகிம் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த நயீம் 62 ரன் (52 பந்து, 6 பவுண்டரி) விளாசி பினுரா பெர்னாண்டோ பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆபிப் உசேன் 7 ரன் எடுத்து ரன் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய முஷ்பிகுர் 32 பந்தில் அரை சதம் அடித்தார். வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. முஷ்பிகுர் 57 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மகமுதுல்லா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் கருணரத்னே, பினுரா, லாகிரு குமாரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. குசால் பெரேரா, பதும் நிசங்கா இருவரும் துரத்தலை தொடங்கினர். குசால் 1 ரன் மட்டுமே எடுத்து நசும் அகமது பந்துவீச்சில் அவுட்டாக, இலங்கை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து நிசங்காவுடன் சரித் அசலங்கா இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 70 ரன் சேர்த்தது.நிசங்கா 24 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷாகிப் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஹசரங்கா 6 ரன் எடுத்து சைபுதின் வேகத்தில் நயீம் வசம் பிடிபட்டார். அடுத்தடுத்து 3 விக்கெட் சரிந்ததால், இலங்கை 79/4 என தடுமாறியது. இந்த நிலையில், அசலங்காவுடன் இணைந்த பானுகா ராஜபக்சா அதிரடியில் இறங்க, இலங்கை ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.அசலங்கா 32 பந்தில் அரை சதம் அடிக்க, ராஜபக்சா 28 பந்தில் 50 ரன் எடுத்து அசத்தினார். அவர் 53 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி நசும் அகமது பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இலங்கை அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. அசலங்கா 80 ரன் (49 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் தசுன் ஷனகா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் நசும் அகமது, ஷாகிப் ஹசன் தலா 2, சைபுதின் 1 விக்கெட் வீழ்த்தினர். சரித் அசலங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இலங்கை அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

மூலக்கதை