உலகக்கோப்பை டி20: பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதால் ரசிகர்கள் முதல் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் வரை அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை டி20: பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதால் ரசிகர்கள் முதல் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் வரை அதிர்ச்சி

துபாய்: உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பையின் சூப்பர் 12 ஆட்டம் ஒன்றில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையில் துபாயில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பல பரீட்சை நடத்தினர். டாசில் வென்ற பாகிஸ்தான் அணி எதிர்பார்த்தபடியே ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் சர்மா சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க லோகேஷ் ராகுல், சூர்யகுமார் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் கோலியுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து தூக்கி நிறுத்தினர்.ரிஷப் பந்த் 2 சிக்ஸர், 2 பவுண்ட்ரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கேப்டன் கோலி பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் ஜொலித்த ரவீந்திர ஜடேஜா ஹர்டிக் பாண்டியா ஆகியோர் பெரிய அளவில் கை கொடுக்காததால் இந்திய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகிப் அப்ரிடி 3 விக்கெட்களையும் அசாம் அலி 2 விக்கெட்களையும், ஷதாப் கான், ஆருஷ்ரஃப் ஆகியோர் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் 152 ரன்களை இழக்க கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசமும், முகமது ரிஸ்வானும் அசத்தல் தொடக்கம் தந்தனர். ஆட்டமிழப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தராமல் அதிரடியாக ஆடி இந்திய பவுலர்களை இருவரும் திணறடித்தனர்.இந்திய பவுலர்களால் பாகிஸ்தான் தொடக்க ஜோடியை கடைசி வரை அசைக்க முடியவில்லை. அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்திய இருவரும் கொஞ்சமும் அழுத்தமோ பதற்றமும் இல்லாமல் 18வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு வெற்றி தேடி தந்தனர். பாபர் ஆசம் 68 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 78 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவை முதல்முறையாக வீழ்த்தி பாகிஸ்தான் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. அதுவே உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி நடை முடிவுக்கு வந்திருப்பது விராட் கோலியின் கேப்டன் பதவிக்கு விழுந்த கரும்புள்ளியாக மாறியுள்ளது.உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்திய அணி வீழ்ந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. துபாய் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்த்துவிட்டு வெளியே வந்த இந்திய ரசிகர்கள் சோக மாயமாய் காட்சி அளித்தனர். உலகமே எதிர்நோக்கும் போட்டியில் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் செயல்பாடு குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான் என்றாலும் இந்திய அணி தோற்றவிதம் ஏமாற்றம் தருவதாக அவர்கள் கூறினர்.இந்தியாவிலும் நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஆட்டத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்திய அணி தோல்வியால் கலையிழந்தனர். மும்பையில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய அணியின் தோல்வி கண்டு அதிர்ச்சியுற்றனர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என சகல துறைகளிலும் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி கொண்டுவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தேர்வு குறித்தும் கேப்டன் விராட் கோலியின் செயல்பாடு குறித்தும் சில ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இனியாவது தவறுகளை களைந்து உலக கோப்பையில் அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணி வலுவாக மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

மூலக்கதை