பண்டிகை காலமும் நிதிக்கல்வியின் தேவையும்

தினமலர்  தினமலர்
பண்டிகை காலமும் நிதிக்கல்வியின் தேவையும்

பண்டிகை காலம் கொண்டாட்டத்திற்கான வாய்ப்பாக அமைகிறது. புதிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி மகிழ்வதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது; அதற்கேற்ப வர்த்தக நிறுவனங்களும் தள்ளுபடி சலுகைகளை வாரி வழங்கி நுகர்வோரை ஈர்க்கின்றன. பண்டிகை கால செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வது அவசியம் என்பதோடு, குழந்தைகளுக்கு நிதிக் கல்வியின் முக்கிய அம்சங்களை கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பாகவும் அமைவதை புரிந்து கொள்ள வேண்டும். பண்டிகை காலத்தை முன்னிட்டு, குழந்தைகளிடம் நிதிக் கல்வி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான வழிகளை பார்க்கலாம்.


பரிசுப் பொருட்கள்:


பண்டிகை காலத்தில் பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஆசிகளுடன் பரிசுப் பொருட்களை அளிக்கும் பழக்கமும் இருக்கிறது. பரிசாக பலவித பொருட்களை அளிக்கலாம் என்றாலும், ரொக்க பணத்தை அளிக்கும் பழக்கமும் பின்பற்றப்படுகிறது. இந்த பழக்கத்தை, பணத்தின் அருமையை உணர்த்த பயன்படுத்திக் கொள்ளலாம்.


கொண்டாட்டம்:


பண்டிகை காலம், குடும்பத்துடன் குதுாகலமாக நேரத்தை செலவிட வழி செய்கிறது. புத்தாடைகள், இனிப்புகள் என, குடும்பத்தினர் ஒன்றாக பேசி மகிழும் நிலையில், சேமிப்பின் முக்கியத்துவம் பற்றியும் பிள்ளைகளுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும். உறவினர்கள் பரிசளிக்கும் பணத்தை செலவு செய்யாமல், சேமிக்க ஊக்குவிக்கலாம்.-


பட்ஜெட் பழக்கம்:


சேமிப்பு பற்றி கற்றுத் தருவதோடு, பணத்தை பட்ஜெட் போட்டு செலவிடுவதன் அவசியத்தையும் எடுத்துக் கூற வேண்டும். பிள்ளைகள் விரும்பும் பொருட்களை பட்டியலிடச் சொல்லி, அவற்றை வாங்க தேவையான தொகையை கணக்கிட வைத்து, ஒவ்வொன்றுக்கும் ஒதுக்க வேண்டிய தொகையை தீர்மானிக்க வைக்கலாம். திட்டமிட்டு சேமிக்கும் பழக்கத்தையும் சொல்லித் தரலாம்.



ரொக்கப்பணம்:

திட்டமிட்டு செலவிடுவதன் அவசியம் பற்றி பேசுவதன் மூலம், பிள்ளைகள் மனதில் பொருட்களை வாங்க பணம் தேவை என்பதை புரிய வைக்கலாம். இதன் மூலம், பணத்தின் மதிப்பையும் உணர்த்தலாம். அத்தியாவசிய செலவு மற்றும் தேவையில்லாத செலவு பற்றியும் சிறு வயதிலேயே புரிய வைக்கலாம்.

பரிசு கார்டு:


பரிசுத் தொகையை ரொக்கமாக அளிப்பதற்கு பதில் கார்டாக அளித்து, அதை இயக்கி நிர்வகிக்கும் முறையையும் கற்றுக் கொடுக்கலாம். இது, அவர்களுக்கு பொறுப்புணர்வையும் அளிக்கும். குறிப்பிட்ட தொகையை பிள்ளைகள் பெயரில் முதலீடு செய்து, அவர்களுக்கு முதலீட்டின் அவசியத்தையும் உணர்த்தலாம்.

மூலக்கதை