அமைச்சர் பி.ஏ.,விடம் அடி வாங்கிய போலீஸ் :ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வால் அசிங்கப்பட்ட அதிகாரி

தினமலர்  தினமலர்
அமைச்சர் பி.ஏ.,விடம் அடி வாங்கிய போலீஸ் :ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வால் அசிங்கப்பட்ட அதிகாரி


காஞ்சிபுரம், திருச்செந்துார் ஆகிய இரு நகரங்களில், தி.மு.க., --எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் உதவியாளர் ஆகியோர் அடாவடியாக நடந்த சம்பவம், அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் சம்பவம்அத்திவரதர் காட்சி கொடுத்த சமயத்தில், காஞ்சிபுரத்தில் கூடிய கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அரசின் நிதி உதவியோடு, தமிழக சுற்றுலா துறை, அறநிலையத் துறைகள் சேர்ந்து, காஞ்சிபுரம் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்காக பெரிய அளவில் தங்கும் விடுதிகள் கட்ட திட்டமிடப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தில், 20 கோடி ரூபாய் செலவில் 'யாத்ரி நிவாஸ்' கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கேயே பக்தர்கள் வரும் கார்கள், பஸ்களை நிறுத்த பிரமாண்ட வாகன நிறுத்தும் இடம், தகவல் மையம் அமைக்கப்பட்டன. விரைவில் திறக்கப்பட உள்ள யாத்ரி நிவாஸ் கட்டடங்களை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்தார்.
அவரோடு, ஏகாம்பரநாதர் கோவில் செயல் அதிகாரி தியாகராஜன், கலெக்டர் ஆர்த்தி, தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் சென்றனர்.

வாகன நிறுத்தும் இடத்தில் பழைய லாரிகள் நிற்பதை பார்த்த எம்.எல்.ஏ., எழிலரசன், 'டென்ஷன்' ஆனார். கோவில் அதிகாரி தியாகராஜனைப் பார்த்து, 'யாருய்யா கோவில் இடத்துல வண்டியை நிறுத்தி இருக்கறது'ன்னு கேட்டு, 'செருப்பு பிய்ந்து விடும்' என, ஆவேசமாக கூறினார். இதைக் கேட்ட அமைச்சர் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியாகினர். எம்.எல்.ஏ., ஆக்ரோஷமாக பேசும் 'வீடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசு ஊழியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, எம்.எல்.ஏ., எழிலரசன் கூறியதாவது:கோவில் இடத்தை, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் நந்தகுமார் ஆக்கிரமித்துள்ளார் என சொன்னதும், அதிகாரிகள் துணையின்றி தனிநபர் ஒருவர் எப்படி ஆக்கிரமிக்க முடியும் என்பதை, எனக்கே உரிய ஆக்ரோஷத்துடன் கோவில் அதிகாரியிடம் கேட்டேன்.
செருப்பால் அடிக்க வேண்டும் என சொன்னது, ஆக்கிரமிப்பாளரை தான். ஆனால், அதை சிலர் திரித்து, அரசு அதிகாரியை திட்டியது போல வெளியிடுகின்றனர். எப்படியோ, என் முயற்சியால், ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடம் உடனடியாக மீட்கப்பட்டு விட்டது. என் கோபம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக எனக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

திருச்செந்துார் சம்பவம்நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில், திருச் செந்துார் மணி அய்யர் ஓட்டல் சந்திப்பில், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் பயன்படுத்தும், அரசுக்கு சொந்தமான 'இன்னோவா' கார் நிறுத்தப்பட்டிருந்தது.அங்கு, தலைமை காவலர் முத்துகுமார், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர், இன்னோவா காரை எடுக்க கூறி, டிரைவர் குமாரை வலியுறுத்த, அவர் மறுத்து விட்டார். அருகில் இருந்த ஆட்டோக்காரர்கள் சத்தம் போட்ட பின், காரை தள்ளி நிறுத்தினார். சிறிது நேரத்தில், ஓட்டல் அறையில் தங்கியிருந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன், தகவல் தெரிந்து வெளியே வந்தார். போலீஸ்காரர் முத்துகுமாரை கடுமையாக திட்டினார். இருவர் பிடித்துக் கொள்ள, போலீஸ்காரர் முத்துகுமாரை தாக்கினார். அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற முத்துகுமார், பின், கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் போலீசாரிடமும், பொதுமக்களிடமும் காட்டுத் தீயாக பரவ, எஸ்.பி., ஜெயகுமார் சமாதானம் செய்தார். முத்துகுமார் கூறியதாவது:நான் பணிவோடு தான் சொன்னேன். ஆனால், டிரைவர் குமார் என்னை அவதுாறாக பேசினார். கிருபா, என்னை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கி கேவலமாக பேசினார். இரவில், இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். நான் ஒரு சாதாரண போலீஸ்காரன். எல்லாமும் முருகக் கடவுள் சன்னிதி பகுதியில் நடந்துள்ளது. இறைவன் தண்டனை கொடுப்பான்.
இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் உதவியாளர் கிருபாகரன் கூறியதாவது:போலீஸ்காரர் முத்துகுமார் தாறுமாறாக பேசியதோடு, டிரைவரிடம் அடாவடியாக நடந்துள்ளார். அதை தான் தட்டிக் கேட்டேன். அப்போது, காரசார விவாதம், தள்ளுமுள்ளு நடந்தது. இதை ஊதி பெரிதாக்கி விட்டார்.தன்னை அடித்ததாக போலீசில் புகார் கொடுத்து விட்டார். பிரச்னை செய்ய விரும்பாததால், இரு தரப்பினரும் சமாதானமாகி விட்டோம். புகார் வாபஸ் பெறப்பட்டு விட்டது. இதில், அமைச்சருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்பட்டபோது, எங்கள் மீது போலீசார் வெறுப்பில் இருந்தனர். அந்த வெறுப்புக்கு இப்போது பழிவாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''சென்னையில் இருக்கிறேன். இப்படியொரு சம்பவம் நடந்ததும் தகவல் வந்தது. தி.மு.க.,வினர் எப்போதும் போலீசுடன் இணக்கமாக செயல்படுவர். ''எனவே, போலீசாருடன் மல்லுக்கட்டக் கூடாது எனக் கூறி, 'பொய் புகார் என்றாலும் கூட பரவாயில்லை; போலீசாரிடம் சுமுகமாக செல்லுங்கள்' எனக் கூறி விட்டேன். அதன் அடிப்படையில் போலீசாருடன் பேசி சுமுகமாகி விட்டனர். பிரச்னை சுமுகமாக முடித்து வைக்கப்பட்டு விட்டது,''
என்றார்.

இது குறித்து, துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயகுமார் கூறும்போது, ''இந்த பிரச்னை, என் கவனத்துக்கு வந்தது. விசாரித்தபோது, நடந்த சம்பவம் உண்மை என தெரிந்தது. நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். ஆனால், புகார் கொடுத்தவர் அதை வாபஸ் வாங்கி விட்டார். ''இரு தரப்பும் சமாதானமாக போய் விட்டதாக, போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்து விட்டனர். அதனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை,'' என்றார். காஞ்சிபுரம் மற்றும் திருச்செந்துார் என, இரண்டு பிரச்னைகளும் தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டு விட்டாலும், தி.மு.க.,வினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, இவை வலு சேர்ப்பதாகவே உள்ளன என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.- நமது நிருபர் --

காஞ்சிபுரம், திருச்செந்துார் ஆகிய இரு நகரங்களில், தி.மு.க., --எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் உதவியாளர் ஆகியோர் அடாவடியாக நடந்த சம்பவம், அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை