வெற்றியுடன் துவக்குமா இந்தியா: ‘உலக’ பயிற்சியில் இங்கிலாந்துடன் மோதல் | அக்டோபர் 17, 2021

தினமலர்  தினமலர்
வெற்றியுடன் துவக்குமா இந்தியா: ‘உலக’ பயிற்சியில் இங்கிலாந்துடன் மோதல் | அக்டோபர் 17, 2021

துபாய்: ‘டி–20’உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எமிரேட்ஸ், ஓமனில் ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் அக். 24ல் துபாயில் சந்திக்கிறது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் ‘சூப்பர்–12’ சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன.

இன்று, துபாயில் நடக்கவுள்ள பயிற்சி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன்பின் வரும் அக். 20ல் துபாயில் நடக்கவுள்ள மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சமீபத்தில் எமிரேட்சில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனில் இந்திய வீரர்கள் பங்கேற்றதால் பயிற்சி போட்டி ஒரு பெரிய விஷயமாக இருக்காது. இந்திய அணிக்கு 2 உலக கோப்பை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் தோனி, ஆலோசகராக அணியில் இருப்பது கூடுதல் பலம்.

 

கடுமையான போட்டி: இந்திய ‘லெவன்’ அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி காணப்படுகிறது. துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் துவக்கம் தர லோகேஷ் ராகுல், இஷான் கிஷானுக்கு இடையில் போட்டி நிலவுகிறது. இதில், சமீபத்திய ஐ.பி.எல்., சீசனில் 626 ரன் குவித்த ராகுலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இருவருக்கும் இடம் கிடைத்தால் ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங் வரிசையில் 6வது இடத்துக்கு தள்ளப்படலாம். மூன்றாவது இடத்தில் கேப்டன் விராத் கோஹ்லி களமிறங்கலாம். இவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் வரலாம்.

‘சுழல்’ வீரர்களாக ரவிந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி தேர்வாகலாம். மூன்றாவது ‘சுழல்’ வீரராக ராகுல் சகார் அல்லது அஷ்வின் வாய்ப்பு பெறலாம். ‘வேகத்தில்’ புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷர்துல் தாகூர் கூட்டணி கலக்கலாம்.

 

ஐ.பி.எல்., அனுபவம்: ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற அனுபவம் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனுக்கு உதவலாம். இவருக்கு, சீனியர் வீரர்களான ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ்  கைகொடுத்தால் நல்லது. பவுலிங்கில் மொயீன் அலி, அடில் ரஷித், மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் அசத்தலாம்.

19 முறை

சர்வதேச ‘டி–20’ அரங்கில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 19 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 10, இங்கிலாந்து 9ல் வென்றன.

 

‘டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய ‘டி–20’ அணி கேப்டன் பதவியில் இருந்து விராத் கோஹ்லி விடை பெறுகிறார். இதுகுறித்து ரெய்னா கூறுகையில், ‘‘உலக கோப்பை தொடரானது கோஹ்லி கேப்டனாக களமிறங்கும் கடைசி ‘டி–20’ தொடர். எனவே இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு கோஹ்லிக்கு கோப்பையை பெற்றுத்தர வேண்டும். தற்போதுள்ள இந்திய அணி பலமாக உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் எந்த ஒரு அணியையும் எளிதில் வீழ்த்தலாம். தவிர, எமிரேட்சில் விளையாடிய ஐ.பி.எல்., அனுபவம் இந்திய வீரர்களுக்கு கூடுதல் பலமாக அமையும்,’’ என்றார்.

 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ‘நோ’

முதுகுப்பகுதியில் (2019) ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, சமீபகாலமாக போட்டியில் பவுலிங் செய்வதில்லை. இருப்பினும் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் காம்பிர் கூறுகையில், ‘‘ஹர்திக் பாண்ட்யா வலைப்பயிற்சியில் மட்டும் பந்துவீசினால் போதாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முறையாக பவுலிங் செய்ய வேண்டும். இல்லையென்றால் இவரை ‘லெவன்’ அணிக்கு தேர்வு செய்யக்கூடாது. ஏனெனில் ‘டி–20’ போட்டியில் ‘ஆல்–ரவுண்டர்’ பங்களிப்பு முக்கியமானது,’’ என்றார்.

மூலக்கதை