காஷ்மீரில் சிறுபான்மையினர், வெளிமாநிலத்தினர் மீது தாக்குதல்; மரண பயத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் பழைய யுக்தி: உளவுத்துறை குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் சிறுபான்மையினர், வெளிமாநிலத்தினர் மீது தாக்குதல்; மரண பயத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் பழைய யுக்தி: உளவுத்துறை குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறுபான்மையினர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் இடையே மன ரீதியாக மரண பயத்தை உண்டாக்கும் பழைய யுக்தியை பாகிஸ்தான் அரங்கேற்றி வருவதாக உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. காஷ்மீரில் சமீப நாட்களாக பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். கடந்த 15 நாளில் 11 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் காஷ்மீரி பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இந்துக்கள் ஆவர். இதைத் தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்களை தீவிரவாதிகள் குறிவைத்து வருகின்றனர். இதுவரையில் 5 பேரை அவர்கள் சுட்டு கொன்றுள்ளனர். கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குல்காம் மாவட்டத்தில் ஒரே அறையில் தங்கியிருந்த 3 பீகார் மாநில தொழிலாளர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் காரணமாக, காஷ்மீரில் சிறுபான்மையினர்களாக உள்ள இந்துக்கள், வெளிமாநில தொழிலாளர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டு இருப்பதால், கூட்டம் கூட்டமாக வெளியேற துவங்கி உள்ளனர். இந்நிலையில், இது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யின் கைங்கர்யம் என இந்திய உளவுத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இது பாகிஸ்தானின் பழைய யுக்தி. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் வெகுவாக குறைந்து விட்டன. கல் எறிதல் உள்ளிட்ட பல பிரச்னைகள் அடங்கி விட்டன. இதனால், காஷ்மீரில் அமைதி நிலவுவதை பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் தனது பழைய தந்திரத்தை அரங்கேற்றி வருகிறது. காஷ்மீரில் இருந்து வெளிமாநிலத்தவர்களையும், சிறுபான்மையினர்களையும் விரட்ட வேண்டும். தீவிரவாதத்தின் மூலமாக காஷ்மீரி மக்களை கவர வேண்டும். இதுதான் அவர்களின் எண்ணம். இதற்காக இங்குள்ள சிறுபான்மையினர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தி மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி மதக்கலரவத்தை தூண்டும் யுக்தியாகவும் இந்த தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். காஷ்மீருக்குள் பொதுமக்களை குறிவைக்கும் அதே வேளையில் தீவிரவாதிகளையும் ஊடுருவச் செய்து பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் காஷ்மீரின் அமைதியை சீர்குலைப்பதே அவர்கள் எண்ணம். இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்த ஒருவார காலமாக காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயலும் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. பூஞ்ச் செக்டாரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்டரில் 8 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.‘ரொம்ப பயமாக இருக்கிறது’ கடந்த 2 நாட்களாக காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 600 பேர் காஷ்மீரை காலி செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. நவ்காம் ரயில் நிலையத்தில் நேற்று 50க்கும் மேற்பட்ட பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் ரயிலுக்காக காத்திருந்தனர். அவர்கள் கூறுகையில், ‘‘ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகமாக இருப்பதால் எங்களுக்கு இது பாதுகாப்பான இடமாக இருக்கிறது. மற்ற போக்குவரத்துகளை காட்டிலும் ரயில் பயணமே பாதுகாப்பானது என்பதால் ரயிலில் ஊருக்கு செல்கிறோம். காஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இங்கு இருக்கவே பயமாக இருக்கிறது. இன்னும் பலர் காஷ்மீரை காலி செய்து உயிருக்கு பயந்து சொந்த ஊர் செல்கின்றனர்’’ என்றனர். குல்காமில் சலூன் ஒன்றில் வேலை செய்யும் காஜியாபாத்தை சேர்ந்த ஜாவித் என்பவர் கூறுகையில், ‘‘எனது முதலாளி என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார். ஆனால் 24 மணி நேரமும் அவர் என்னுடனே இருக்க முடியுமா என்ன? அதனால், உயிருக்கு பயந்து சொந்த ஊருக்கு செல்கிறேன்’’ என்றார்.பிரதமர் மோடி - அமித்ஷா ஆேலாசனை2 மணி நேரம் ஆலோசனைகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை சந்தித்து, 2 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, காஷ்மீர் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய வரும் 23ம் தேதி அங்கு செல்வதாக அறிவித்தார். ஏற்கனவே, 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள ராணுவ தளபதி எம்.எம். நரவானே, இந்திய எல்லைகளை பார்வையிட்டு நேற்று ஆலோசனை நடத்தினார்.

மூலக்கதை