அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 19 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு: பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 19 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு: பரபரப்பு தகவல்கள்

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நள்ளிரவு வரை 19 மணி நேரம் சோதனை நடந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு குறித்து ஏற்கனவே கூறப்பட்ட புகார்கள் மீது  சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தான் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை 6 மணி முதல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உறவினர்கள், பங்குதாரர்களுக்கு சொந்தமான புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள வீடு, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என 50 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், லாட்ஜ்கள் என 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் 10 மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை 15 மணி நேரம், திருவேங்கைவாசலில் அமைச்சருக்கு சொந்தமான கல்குவாரியில் இரவு 10 மணி வரை 16 மணி நேரம் சோதனை நடந்தது. இதேபோல் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான இலுப்பூர் அடுத்த மேட்டுச்சேரியில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்களில் காலை 6 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1 மணி வரை 19 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடந்தது.   இந்த சோதனையில்  4. 87 கிலோ தங்க நகைகள், ரூ. 23. 85 லட்சம் ரொக்கம், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள்,  பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.   கடந்த 5 ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 27. 22 கோடி அளவுக்கு விஜயபாஸ்கர் சொத்து குவித்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3வது முறை சோதனை
ஆர். கே. நகர் இடைத்தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகாரின் பேரில் விஜயபாஸ்கர் வீடு மற்றும் நிறுவனங்களில்  ஏற்கனவே சோதனை நடந்தது.

குட்கா ஊழல் புகார் எழுந்த போதும் ரெய்டு நடந்தது.

தற்போது 3வது முறையாக விஜயபாஸ்கரின் வீடு, நிறுவனங்களில் விஜிலென்ஸ் சோதனை நடந்துள்ளது.

.

மூலக்கதை