கேரள நிலச்சரிவில் 29 பேர் பலி: மேலும் 4 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழு தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள நிலச்சரிவில் 29 பேர் பலி: மேலும் 4 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழு தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த 29 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இன்று காலை மேலும் 4 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் பெரும்பாலும் அதிகளவில் வெள்ள ேசதம் ஏற்படுவதில்லை. ஆனால் இவ்வருடம் இந்த மாதத்தில் தான் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை பெய்யும். இந்த 3 மாதங்களில் பெய்ய வேண்டிய 84 சதவீதம் மழை கடந்த 2 வாரத்தில் கொட்டி தீர்த்துள்ளது.

கடந்த 2 நாட்களில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளனர்.

கோட்டயம் மாவட்டம், கூட்டிக்கல் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் உடல்களும் மீட்கப்பட்டு விட்டன. இவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இடுக்கி மாவட்டம் கொக்கையாரில் நிலச்சரிவில் சிக்கிய 6 பேரின் உடல் மீட்கப்பட்டன. இவர்களில் ஒரே குடும்பத்ைத சேர்ந்தவர்கள் 5பேர் ஆவர்.

இங்கு மேலும் 4 பேரை தேடும் பணி இன்றும் நடைபெற்று வருகிறது. இப்பணியில் தேசிய மீட்பு படையினர், கடற்படை மற்றும் விமான படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று முதல் மழையின் தீவிரம் குறைந்துள்ளது.

ஆனால் வரும் 20ம் தேதி முதல் மீண்டும் மழை தீவிரமாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்கள் மழையால் சிக்கி தவிர்த்து வரும் நிலையில், மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை காரணமாக கேரளாவில் இடுக்கி, முல்லை பெரியாறு, மலம்புழா உள்பட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

இடுக்கி அணையின் மொத்த கொள்ளளவு கடல் மட்டத்தில் இருந்து 2403 அடியாகும். இந்நிலையில் அணை நீர்மட்டம் 2396ஐ தாண்டியது.

இதையடுத்து நேற்று இரண்டாம் கட்டமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2 அடி உயர்ந்தால் கடைசி எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடப்படும்.

இதனால் எந்த நேரத்திலும் அணை திறக்கப்படும். சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் 2018ம் ஆண்டு தான் இடுக்கி அணை திறக்கப்பட்டது.

அப்போதுதான் கேரளாவில் வரலாறு காணாத வெள்ள பெருக்கு ஏற்பட்டது. 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 133 அடியை நெருங்கியுள்ளது.

சாவிலும் இணைபிரியாத அண்ணன், தங்கைகள்

இடுக்கி மாவட்டம், கொக்கையார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 10 பேர் மண்ணில் புதைந்தனர்.

இவர்களில் சியாத் என்பவரின் மனைவி பவுசியா(28), அவரது மகன் அமீன்(10), மகள் அம்னா(7), தவுசியாவின் அண்ணன் பைசலின் மகள் அப்சானா(8), மகன் அசியான்(4) ஆகியோரும் இறந்தனர். இவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

உடல்களை மீட்கும் போது அமீன், அம்னா, அப்சானா ஆகிய 3 பேரும் கட்டிபிடித்தபடி இறந்து கிடந்தனர். இதனை பார்த்த மீட்பு குழுவினர் கண் கலங்கினர்.

வெள்ளத்தை படம் எடுத்த குடும்பம் பலி

கொக்கையார் நிலச்சரிவில் பவுசியா மற்றும் அவரது 2 குழந்தைகளும் இறந்தனர்.

நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக வீட்டின் அருகே கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பவுசியா தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த ஒரு சில நிமிடத்திற்குள் பவுசியாவும் அவரது குடும்பத்தினரும் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை