விடைக்குறிப்பு சரிபார்ப்பு முடிந்தது நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்பு: ஆர்வமுடன் காத்திருக்கும் மாணவர்கள்

தினகரன்  தினகரன்
விடைக்குறிப்பு சரிபார்ப்பு முடிந்தது நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்பு: ஆர்வமுடன் காத்திருக்கும் மாணவர்கள்

புதுடெல்லி: நீட் தேர்வு விடைக்குறிப்பு சரிபார்ப்பு நேற்று இரவுடன் முடிந்த நிலையில், பல லட்சம் மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை சரிபார்த்துக் கொண்டனர். இதன்படி இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் 500க்கும் மேல் மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்புள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ், பிஎஸ்எம்எஸ்  மற்றும் இதர மருத்துவ படிப்புகளில். 86 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, செப்டம்பர் 12ம் தேதி  202 நகரங்களில் 3,858 மையங்களில் நடந்தது. மொத்தம் 13 மொழிகளில்   2 கட்டமாக நடந்தது. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி, தேசிய தேர்வு  முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் நாடு முழுவதும், 11 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு, 15ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அத்துடன் மாணவர்களின் ஓஎம்ஆர் விடைத்தாளையும் இணைய தளத்தில் வெளியிட்டது. இவை இரண்டையும் மாணவர்கள், தங்கள் பிறந்த தேதி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து, விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தது. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட விடைக்குறிப்பில் ஏதாவது பிழை இருந்தால் அதை மாணவர்கள் தக்க  ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம் என்றும் அதற்காக ரூ. 1000 கட்டணம் செலுத்தவும், ஓஎம்ஆர் விடை சரியாக இருந்து விடைக்குறிப்பில் பிழை இருந்தால் அது  குறித்து திருத்தம் செய்ய ஒரு கேள்விக்கு ரூ. 200 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. கடந்த 15ம் தேதி முதல் 17ம் தேதி இரவு 9 மணி வரை மாணவர்கள் இது குறித்து தெரிவிக்கலாம். அதற்கான கட்டணங்களை 17ம் தேதி இரவு 10 மணி வரை  செலுத்தவும் அவகாசம் அளித்து இருந்தது. இதன்படி, தேசிய தேர்வு  முகமை அளித்திருந்த கால அவகாசம் நேற்று இரவு 10 மணியுடன் முடிவுக்கு வந்தது. தேசிய தேர்வு முகமையின் இந்த வாய்ப்பை பல லட்சம் மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அதன்படி, ஒவ்வொரு மாணவரும் தங்கள் ஓஎம்ஆர் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து, தேசிய தேர்வு  முகமை வெளியிட்ட விடைக்குறிப்பையும் பதிவிறக்கம் செய்து ஒப்பிட்டு பார்த்துக் கொண்டனர். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, பல மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகளை நேற்று இரவு வரை சரிபார்த்துக் கொண்டனர். சில தனியார் பயிற்சி மையங்களில் இதற்கென உருவாக்கிய மென்பொருள் மூலமும் மாணவர்கள் தங்கள் விடைகளை சரி பார்த்தனர். தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்த விதிகளின் அடிப்படையில் எத்தனை கேள்விகளுக்கு சரியாக விடை எழுதி இருந்தார்களோ அதற்கு தலா 4 மதிப்பெண்கள் வீதமும், பிழையான விடைகளுக்கு தலா 2 மதிப்பெண்கள் கழித்தும் மதிப்பெண்கள் வந்துள்ளன. இதன்படி இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு மாணவர்கள் விடைகளை சரிபார்த்துள்ளனர். இதன் மூலம் பெரும்பாலான மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்களை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த நீட் தேர்வில்  இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை எடுப்பார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தபடி, அக்டோபர் 15ம் தேதி விடைக்குறிப்பை வெளியிட்டது. இதையடுத்து, அக்டோபர் இறுதிக்குள் வெளியாகும் என்றும் மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மூலக்கதை