ஸ்காட்லாந்துக்கு எதிராக வங்கதேச அணிக்கு 141 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
ஸ்காட்லாந்துக்கு எதிராக வங்கதேச அணிக்கு 141 ரன் இலக்கு

அல் அமெரட்: ஸ்காட்லாந்து அணியுடனான உலக கோப்பை டி20 தகுதிச் சுற்று லீக் ஆட்டத்தில், வங்கதேச அணிக்கு 141 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அல் அமெரட் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மகமதுல்லா முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜார்ஜ் முன்சி, கேப்டன் கைல் கோயட்சர் இருவரும் ஸ்காட்லாந்து இன்னிங்சை தொடங்கினர். கோயட்சர் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, அடுத்து வந்த மேத்யூ கிராஸ் 11 ரன்னில் வெளியேறினார்.ஜார்ஜ் முன்சி 29 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுக்க, அடுத்து வந்த ரிச்சி பெரிங்டன் 2, மைக்கேல் லீஸ்க் 0, கேலம் மெக்லியாட் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஸ்காட்லாந்து அணி 11.3 ஓவரில் 53 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. இக்கட்டான நிலையில், கிறிஸ் கிரீவ்ஸ் - மார்க் வாட் ஜோடி பொறுப்புடன் விளையாடி 7வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தது. மார்க் வாட் 22 ரன் (17 பந்து, 2 பவுண்டரி) எடுக்க, அதிரடி காட்டிய கிரீவ்ஸ் 45 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி முஸ்டாபிசுர் வேகத்தில் ஷாகிப் ஹசன் வசம் பிடிபட்டார். ஜோஷ் டேவி 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன் குவித்தது. அந்த அணி கடைசி 5 ஓவரில் 53 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது. வங்கதேச பந்துவீச்சில் மெகதி ஹசன் 3, ஷாகிப் ஹசன், முஸ்டாபிசுர் ரகுமான் தலா 2, டஸ்கின் அகமது, முகமது சைபுதின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.

மூலக்கதை