பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் ஒமான் அபார வெற்றி

தினகரன்  தினகரன்
பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் ஒமான் அபார வெற்றி

அல் அமெரட்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் தகுதிச் சுற்று பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஒமான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது. அல் அமரெட் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஒமான் அணி முதலில் பந்துவீசியது. பப்புவா நியூ கினியா அணியின் தொடக்க வீரர்கள் டோனி உரா, லெகா சியகா இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இந்த நிலையில், கேப்டன் ஆசாத் வாலா - சார்லஸ் அமினி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தனர். சார்லஸ் 37 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஆசாத் வாலா 56 ரன் (43 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, பப்புவா நியூ கினியா மீண்டும் தடுமாறியது. செசெ பாவ் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. கபுவா மோரியா 6 ரன், நொசைனா போகனா 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒமான் பந்துவீச்சில் ஜீஷன் மக்சூட் 4, பிலால் கான், கலீமுல்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஒமான் அணி களமிறங்கியது. ஆகிப் இலியாஸ், ஜதிந்தர் சிங் இருவரும் துரத்தலை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ஒமான் அணி 13.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 131 ரன் எடுத்து மிக எளிதாக வென்றது. ஆகிப் இலியாஸ் 50 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஜதிந்தர் சிங் 73 ரன்னுடன் (42 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒமான் அணி 2 புள்ளிகளை தட்டிச் செல்ல, பந்துவீச்சில் அசத்திய ஜீஷன் மக்சூட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மூலக்கதை