தெற்காசிய கால்பந்து போட்டி: 8வது முறையாக இந்தியா சாம்பியன்

தினகரன்  தினகரன்
தெற்காசிய கால்பந்து போட்டி: 8வது முறையாக இந்தியா சாம்பியன்

மாலே: 13வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா-நேபாளம் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன. நேற்று இரவு நடந்த இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதின. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 49வது நிமிடத்தில் கேப்டன் சுனில்சேத்ரி கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். அடுத்த நிமிடத்தில் (50வது நிமிடம்) சுரேஷ் வாங்ஜாம், 90வது நிமிடத்தில் சஹால் சமாத் கோல் அடித்தனர். கடைசி வரை போராடியும் நேபாளம் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று 8வது முறையாக சாம்பியன் மகுடம் சூடியது. நேற்று ஒரு கோல் அடித்த சுனில் சேத்ரி, சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் மெஸ்சியை (80 கோல்) சமன் செய்தார்.

மூலக்கதை