புனித நூலை களங்கப்படுத்தி இருக்க வாய்ப்பே இல்லை எனது கணவர் கடவுள் பக்தி மிகுந்தவர்

தினகரன்  தினகரன்
புனித நூலை களங்கப்படுத்தி இருக்க வாய்ப்பே இல்லை எனது கணவர் கடவுள் பக்தி மிகுந்தவர்

அமிர்தசரஸ்: ‘எனது கணவர் கடவுள் பக்தி மிகுந்தவர். அவர் சீக்கிய புனித நூலை களங்கப்படுத்தி இருக்க வாய்ப்பே இல்லை,’ என்று சிங்கு எல்லையில் கொடூரமாக கொல்லப்பட்ட லக்பீர் சிங்கின் மனைவி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியின் சிங்கு எல்லையில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்ட களத்துக்கு அருகே, நேற்று முன்தினம் பஞ்சாப்பை சேர்ந்த 35 வயதான லக்பீர் சிங் என்பவர், கைகள் வெட்டப்பட்டு, உடல் முழுவதும் 10க்கும் மேற்பட்ட கத்தி குத்து காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் பயன்படுத்தும் தடுப்பு (பேரிகார்டு) ஒன்றில் அவருடைய சடலம் கட்டப்பட்டு கிடந்தது. இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ‘சீக்கியர்களின் புனித நூலை களங்கப்படுத்தி பேசியதற்காக அவரை கொலை செய்தேன்,’ என நிஹாங் சீக்கிய பிரிவை சேர்ந்த சரப்ஜித் சிங் என்பவர் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள வித்வா என்ற பகுதியை சேர்ந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  இதற்கிடையே, இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட நிஹாங் பிரிவை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லக்பீர் சிங்கின் மனைவி ஜஸ்பிரீத் கவுர். இவர்களுக்கு 12, 11 மற்றும் 8 வயதில் 3 மகள்கள் உள்ளனர். ஒரு மகன் இறந்து விட்டார். பஞ்சாப்பின் புனித நகரமான அமிர்தசரசில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள சீமா கலன் என்ற கிராமத்தில், மண் வீட்டில் இவர்கள் வசித்து வருகின்றனர். ஜஸ்பிரீத் கவுரும், லக்பீர் சிங்கின் சகோதரி ராஜ் கவுரும் கூறுகையில், ‘‘விவசாய கூலி வேலை செய்துதான், லக்பீர் சிங் எங்களை காப்பாற்றி வந்தார். அவர் வேலைக்கு சென்று வந்தால்தான், எங்களுக்கு 2 வேளை உணவாவது  கிடைக்கும். அவர் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். கடவுளின் மீது அதிக பயம் கொண்டவர். அவர் சீக்கிய புனித நூலை களங்கப்படுத்தி பேசி இருக்கவே மாட்டார். அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. குற்ற வழக்குகளும் கிடையாது. எந்த கட்சியிலும், அமைப்பிலும் கூட உறுப்பினராக இல்லை. 3 தினங்களுக்கு முன் அவர் வீட்டை விட்டு வேலைக்கு சென்றபோது, கையில் ரூ.50 மட்டுமே வைத்திருந்தார். இதை  வைத்து கொண்டு, சிங்கு எல்லைக்கு அவரால் சென்றிருக்க முடியாது. வேலைக்கு வந்தால் அதிக பணம் தருவதாக கூறி, யாராவது அங்கு அழைத்து சென்றிருக்க கூடும். எனவே, அவருடைய கொலைக்கான பின்னணி குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்,’’ என்றனர்.விவசாயிகளை அகற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு‘டெல்லியின் எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளை அங்கிருந்து அகற்ற உத்தரவிட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச்சில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை தொடர்ந்துள்ள சுவாதி கோயல், சஞ்சீவ் நிவார் ஆகியோர் நேற்று தாக்கல் செய்துள்ள புதிய இடைக்கால மனுவில், ‘டெல்லி எல்லையில் போராட்டம் என்ற பெயரில் மக்கள் விரோத நடவடிக்கைகள் அதிகமாகி இருக்கின்றன. பாலியல் பலாத்காரம், படுகொலைகள், தலித் வாலிபர் படுகொலை என இந்த பட்டியல் நீள்கிறது. எனவே, போராட்ட களத்தில் இருந்து விவசாயிகளை அகற்ற உத்தரவிட கோரிய எங்களின் மனுவை அவசரமாக எடுத்து விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்,’ என கூறியுள்ளனர்.தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் மனு* லக்பீர் சிங்கையும், அவருடைய சகோதரி ராஜ்கவுரையும் குழந்தைகள் இல்லாத ஹர்னம் சிங் என்ற ராணுவ வீரர் தத்தெடுத்து வளர்த்துள்ளார். * லக்பீர் சிங் தலித் பிரிவை சேர்ந்தவர். இவரை படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் 15க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகள் மனு கொடுத்துள்ளன.

மூலக்கதை