கொளத்தூர் தொகுதியில் 560 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொளத்தூர் தொகுதியில் 560 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

பெரம்பூர்: தமிழக முதல்வரும் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு. க. ஸ்டாலின், இன்று கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்,  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருமண உதவித் தொகை, நலிந்தவர்களுக்கான  உதவித்தொகை, சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கான  உதவித்தொகை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி  உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முதலாவதாக கொளத்தூர் பள்ளி சாலை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார திட்டத்தின் கீழ் வரும் முன் காப்போம் திட்டத்தை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கொளத்தூர் எவர்வின் பள்ளியில்  அரசு சார்பில் 560 ஏழை, எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் 3 சக்கர சைக்கிள் வழங்கினார்.


இதையடுத்து, பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் மு. க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர், 210 பேர் அமரக்கூடிய 70 நாற்காலிகளை மருத்துவமனைக்கு வழங்கினார்.

ஜிகேஎம் காலனி 12வது தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வங்கி சார்பில் அரசு பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அங்கு, 1500 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்  மேஜை, நாற்காலிகளை முதல்வர் வழங்கினார்.

மேலும் 70 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.   இதைத்தொடர்ந்து 34 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர், கொளத்தூர் சிவ இளங்கோ சாலையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கிளினிக்கை துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,  சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன்  மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

.

மூலக்கதை