நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெ. நினைவிடத்தில் சசிகலா மீண்டும் சபதம்?: அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவாரா

தமிழ் முரசு  தமிழ் முரசு
நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெ. நினைவிடத்தில் சசிகலா மீண்டும் சபதம்?: அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவாரா

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பெங்களூர் சிறைக்கு சென்ற சசிகலா தண்டனை காலம் நிறைவடைந்து கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையானார்.

சிறையில் இருந்து விடுதலையாகி திரும்பிய சசிகலாவிற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பான சசிகலாவின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், ஜனவரி 28ம் தேதி அவர் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அவர் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை.

இந்தநிலையில், அமமுகவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். பின்னர், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், தான்  தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார்.

சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.   பல மாதங்களாக எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத சசிகலா, சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, நான் விரைவில் வருகிறேன்.

அதிமுக தலைமை சரியில்லை. உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார்.    சசிகலாவின் ஆடியோ அரசியல் அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

அதிமுக தலைமையின் உத்தரவின் பேரில் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், அதிமுக பொன்விழா நாளை கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 9. 30 மணியளவில் சசிகலா தி. நகரில் உள்ள இளவரசியின் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி புறப்பட்டார்.

ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது.   அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் அதிமுக கொடியை கையில் வைத்துக்கொண்டு ஆரவாரமுடன் வரவேற்பு அளித்தனர்.   சசிகலாவின் காரின் இருபுறம் அவரது ஆதரவாளர்கள் பைக் மற்றும் கார்களில் பின்தொடர்ந்து நினைவிடம் நோக்கி வந்தனர்.   பின்னர், சுமார் 11. 30 மணியளவில் எம். ஜி. ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், ஜெயலலிதா நினைவிடம் வந்த சசிகலா, நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் கண்ணீர் வடித்தார். பின்னர், 10 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்.



சசிகலா சிறை செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில்  சபதம் எடுத்துக்கொண்டார். இந்தநிலையில், நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் இன்று சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவது குறித்து சபதம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நாளை காலை 10 மணியளில் தி. நகரில் அமைந்துள்ள எம். ஜி. ஆரின் நினைவிடத்திற்கு செல்கிறார்.

பின்னர், மதியம் 12 மணியளவில் ராமாவரம் இல்லத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். சிறையில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா 8 மாதங்களுக்கு பிறகு இன்று ஜெயலலிதா நினைவிடம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது கொரோனா குறைந்துள்ளதால் மீண்டும் தீவிர அரசியலுக்கு சசிகலா திரும்பியுள்ளார். ஆனால் அதிமுகவில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்த முடியவில்லை.

ஆனாலும் அவர் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை