கேகேஆரை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேகேஆரை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

துபாய்: 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்றிரவு துபாயில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் குவித்தது.

அதிகபட்சமாக டுபிளசிஸ் 59 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ரன் எடுத்து கடைசி பந்தில் அவுட் ஆனார். ருதுராஜ் 32 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்), ராபின் உத்தப்பா 31 (15 பந்து, 3 சிக்சர்), மொயீன் அலி ஆட்டம் இழக்காமல் 37 ரன்(20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தனர்.

பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களே எடுத்தது.

இதனால் சென்னை 27 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா அணியில் சுப்மான் கில் 51 (43 பந்து), வெங்கடேஷ் ஐயர் 50 ரன் (32 பந்து) அடித்தனர்.

நிதிஷ் ரானா 0, சுனில் நரேன் 2, மோர்கன் 4, தினேஷ் கார்த்திக் 9, சாகிப் அல்ஹசன் 0, ராகுல் திரிபாதி 2 ரன்னில் ஆட்டம் இழந்தனர். சென்னை பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 3, ஜடேஜா, ஹேசல்வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

86 ரன் எடுத்த டூபிளசிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 32 விக்கெட் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் பட்டேல் தொடர் நாயகன் விருது பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

கொல்கத்தா அணிக்கு ரூ. 12. 5 கோடி கிடைத்தது.

பரிசு கோப்பையை பெற்ற பின்னர் சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியதாவது: சென்னை அணியை பற்றி பேசுவதற்கு முன், கொல்கத்தா பற்றி பேச வேண்டும்.

இந்த ஆண்டு ஐ. பி. எல். கோப்பையை வெல்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்த அணி என்றால் அது கொல்கத்தா தான்.

அவர்களது ஆட்டம் மிக சிறப்பாக இருந்தது. அடுத்த ஆண்டு ஐ. பி. எல்.

தொடரில் 2 புதிய அணிகள் வர உள்ள நிலையில், பி. சி. சி. ஐ. எடுக்கும் முடிவை பொறுத்து எனது எதிர்கால திட்டம் அமையும்.

சென்னை அணிக்காக நான் விளையாடுவது என்பதை விட, சென்னை அணிக்கு எது சிறந்தது என்பதைதான் பார்க்க வேண்டும், எங்கள் பயிற்சி அமர்வுகள் நன்றாக இருந்தன. நாங்கள் எங்கு சென்று ஆடினாலும் ரசிகர்கள் வந்து ஆதரவு அளித்தனர்.

நாங்கள் சென்னையில் விளையாடுவது போல் உணர்கிறோம். இதனால் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

ரசிகர்களுக்காக நாங்கள் சென்னை திரும்புவோம் என்று நம்புகிறோம், என்றார். சென்னை அணியில் நீங்கள் விட்டுச் சென்ற மரபு குறித்து பெருமைப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த டோனி, “நான் இன்னும் சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

''வெங்கடேசுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது''
தோல்விக்கு பின் கேகேஆர் கேப்டன் இயான்மோர்கன் கூறுகையில், ``இளம் வீரர்கள் போராடிய விதத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

இன்று துரதிருஷ்ட நாளாக எங்களுக்கு அமைந்துவிட்டது.   வெங்கடேஷ் இந்த தளத்திற்கு புதியவர், ஆனால் பெரிய எதிர்காலம் உள்ளது. அவரும் கில்லும்தான் எங்கள் பேட்டிங்கின் மூளைக்கல்.

திரிபாதி காட்டிய ஆற்றல் முற்றிலும் சிறப்பானது’’ என்றார்.

''ருதுராஜிடம் சிறப்பு திறமை உள்ளது''
ஆட்டநாயகன் டூபிளசிஸ் கூறுகையில், ``இது ஒரு சிறந்த நாள். நான் இன்று மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இது ஐபிஎல்லில் எனது 100 வது ஆட்டம். நான் இங்கே என் நேரத்தை நேசித்தேன்.

4வது முறையாக கோப்பையை வென்றதில் மிகுந்த மகிழ்ச்சி. ருதுராஜ் கெய்க்வாட்டிடம் சிறப்பு திறமை உள்ளது.

அவருக்கு, பிரகாசமான எதிர்காலம் உள்ளது’’என்றார்.
32 விக்கெட் எடுத்து பர்பிள் தொப்பி மற்றும் தொடர்நாயகன் விருது பெற்ற ஹர்ஷல் பட்டேல்: மிக்க நன்றி. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான பருவமாக இருந்தது.

சீசன் முழுவதும் நான் பந்துவீசிய விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

.

மூலக்கதை