உலக கோப்பை அணியில் ஷர்துல் | அக்டோபர் 13, 2021

தினமலர்  தினமலர்
உலக கோப்பை அணியில் ஷர்துல் | அக்டோபர் 13, 2021

புதுடில்லி: உலக கோப்பை ‘டி–20’ இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.

ஐ.சி.சி., உலக கோப்பை ‘டி–20’ தொடர் வரும் அக். 17–நவ. 14ல் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக கோஹ்லி, துணைக் கேப்டனாக ரோகித் சர்மா தவிர, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, சுழல் வீரர் அஷ்வின், வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றனர். சுழலில் ஜடேஜா, ராகுல் சகார், அக்சர் படேல் தேர்வாகினர். அணியில் மாற்றம் செய்ய நாளை வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

இதனிடையே 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற அக்சர் படேல், மாற்று வீரராக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதில் சமீபத்திய போட்டிகளில் அசத்தி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், முக்கிய அணியில் சேர்க்கப்பட்டார். இவர் சென்னை அணிக்காக 14 போட்டிகளில் 18 விக்கெட் சாய்த்துள்ளார். ‘ஆல் ரவுண்டர்’ பெயரில் இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்ட்யா, ஐ.பி.எல்., தொடரில் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை. இதனால் ஷர்துல் தாகூர் இடம் பிடித்துள்ளதாக தெரிகிறது.

தோனி ஆலோசனையா

முன்னாள் கேப்டன் தோனி ஆலோசகர் ஆன நிலையில், சென்னை அணியில் இடம் பெற்று சமீபத்தில் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காத சுழல் வீரர்கள் கரண் சர்மா, கிருஷ்ணப்பா கவுதம் ‘நெட்’ பவுலராக சேர்க்கப்பட்டனர். பெங்களூரு அணியின் சகால், 18 விக்கெட் (15 போட்டி) சாய்த்த போதும் புறக்கணிப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுக்குழுத் தரப்பில் வெளியான அறிக்கை:

அக்சர் படேல் மாற்று வீரராக இருப்பார். ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டால் இவர் முக்கிய அணியில் இடம் பெறுவார். இதனால், ‘சுழல்’ வீரர் அக்சர் தேவைப்பட மாட்டார் என்பதால், வேகப்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ஷர்துல் இடம் பெற்றார். தவிர அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், லுக்மேன் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரண் சர்மா, ஷாபாஸ் அகமது, கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணிக்கு உதவும் வகையில் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யார் யார்

கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பன்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ராகுல் சகார், அஷ்வின், ஷர்துல் தாகூர், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

மாற்று வீரர்கள்

ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சகார், அக்சர் படேல்

மூலக்கதை