இந்திய அணிக்கு புதிய ‘ஜெர்சி’ | அக்டோபர் 13, 2021

தினமலர்  தினமலர்
இந்திய அணிக்கு புதிய ‘ஜெர்சி’ | அக்டோபர் 13, 2021

புதுடில்லி: இந்திய அணியினருக்கான புதிய ஜெர்சி நேற்று வெளியானது.

இந்திய கிரிக்கெட் அணியின் ‘கிட் ஸ்பான்சராக’ எம்.பி.எல்., ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்ளது. இந்திய வீரர், வீராங்கனைகள் ‘ஜெர்சி’ மற்றும் அது சார்ந்த பிற பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்கிறது. இதன் சார்பில் 2020ல் இந்திய அணி வீரர்களுக்கு புதிய ‘ஜெர்சி’ அறிமுகம் ஆனது.

தற்போது ‘டி–20’ உலக கோப்பை தொடரை முன்னிட்டு, நேற்று மீண்டும் புதிய ‘ஜெர்சி’ அறிமுகம் ஆனது. ‘லட்சக்கணக்கான வாழ்த்துகளுடன்... ஜெர்சி,’ என பெயரிடப்பட்ட இந்த ஆடையை இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா, ராகுல், பும்ரா, ஜடேஜா புதிய ‘ஜெர்சி’ அணிந்து ‘போஸ்’ கொடுத்தனர்.

எளிதில் ஈரப்பதத்தை உறிஞ்சக் கூடிய, வேகமாக உணரும் தன்மை கொண்ட வகையில் ‘பாலியெஸ்டரால்’ கலந்த துணியினால் ‘ஜெர்சி’ தயாராகியுள்ளது. இடது புறம் இந்திய கிரிக்கெட் போர்டு லோகோ. இதன் மேல் மூன்று நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1983, 2011ல் ஒருநாள், 2007ல் ‘டி–20’ உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் இந்த நட்சத்திரங்கள் உள்ளன.

எம்.பி.எல்., ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,‘இந்திய ‘டி–20’ உலக கோப்பை தொடரின் ஒரு பகுதியாக, புதிய ‘டி–20’, ஒருநாள் ‘ஜெர்சி’ வெளியிடப்பட்டது. கொரோனாவுக்கு பிந்தைய உலக கோப்பை தொடருக்காக, ‘நேவி புளு’ (அடர் நீலம்) நிறத்திலான ஜெர்சியை கோஹ்லி அணியினர் அணிந்துள்ளனர்,’ என தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போது வெளியான ‘ஜெர்சி’ தான் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கு பயன்படுத்தப்படும் என உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. எமிரேட்ஸ் உலக தொடருக்கு என பிரத்யேகமான சீருடை பின்னர் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

மூலக்கதை