திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி | அக்டோபர் 13, 2021

தினமலர்  தினமலர்
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி | அக்டோபர் 13, 2021

சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. டில்லி அணி வெளியேறியது.

எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த பைனலுக்கான தகுதிச் சுற்று–2ல் டில்லி, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

தவான் ஆறுதல்: டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. சாகிப் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் பிரித்வி. இவருக்கு ஒத்துழைப்பு தந்த தவான், சுனில் நரைன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 32 ரன் சேர்த்த போது வருண் சக்ரவர்த்தி ‘சுழலில்’ பிரித்வி (18) சிக்கினார். ஸ்டாய்னிஸ் (18) நிலைக்கவில்லை. தவான் (36) ஆறுதல் தந்தார். கேப்டன் ரிஷாப் பன்ட் (6) ஏமாற்றினார். பெர்குசன் வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய ஷிம்ரான் ஹெட்மயர் (17) ‘ரன் அவுட்’ ஆனார். நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.

டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்தது. ஸ்ரேயாஸ் (30), அக்சர் படேல் (4) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் வருண் 2 விக்கெட் கைப்பற்றினார்.

 

நல்ல துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. நார்ட்ஜே வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் சுப்மன். அக்சர் படேல், ரபாடா பந்துகளில் சிக்சர் விளாசிய வெங்கடேஷ் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த போது ரபாடா ‘வேகத்தில்’ வெங்கடேஷ் (55) வெளியேறினார். நிதிஷ் ராணா (13) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சுப்மன் (46) நம்பிக்கை தந்தார். தினேஷ் கார்த்திக் (0) ஏமாற்றினார்.

 

‘திரில்’ வெற்றி: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டன. முதல் பந்தில் ராகுல் திரிபாதி ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் சாகிப் அல் ஹசனை (0) அவுட்டாக்கிய அஷ்வின், 4வது பந்தில் நரைனையும் (0) வெளியேற்ற ‘டென்ஷன்’ ஏற்பட்டது. அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பிய திரிபாதி வெற்றியை உறுதி செய்தார்.

 

டில்லி ‘அவுட்’: கோல்கட்டா அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 136 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிபாதி (12) அவுட்டாகாமல் இருந்தார். லீக் சுற்றில் 22 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த டில்லி அணி பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

 

மூன்றாவது முறை

ஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டா அணி 3வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக விளையாடிய இரண்டு பைனலிலும் (2012, 2014) வெற்றி பெற்று கோப்பை வென்றது.

 

பைனலில் சென்னையுடன் மோதல்

ஐ.பி.எல்., தகுதிச் சுற்று–2ல் டில்லி அணியை வீழ்த்திய கோல்கட்டா அணி, நாளை துபாயில் நடக்கவுள்ள பைனலில் மூன்று முறை கோப்பை வென்ற தோனியின் சென்னை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகள் 2வது முறையாக பைனலில் மோதுகின்றன. கடந்த 2012ல் நடந்த பைனலில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றிருந்தது.

மூலக்கதை