வைரசை அதிக தூரத்திற்கு கடத்தும் இதமாக வீசும் தென்றலும் கூட புயலாக கொரோனா பரப்பும்: மாஸ்க் போட்டால் மட்டுமே தப்பலாம்

தினகரன்  தினகரன்
வைரசை அதிக தூரத்திற்கு கடத்தும் இதமாக வீசும் தென்றலும் கூட புயலாக கொரோனா பரப்பும்: மாஸ்க் போட்டால் மட்டுமே தப்பலாம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் உட்புற அறைகளைக் காட்டிலும், வெளிப்புற காற்றில் வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஏற்கனவே ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போது, மழைக்காலத்தில் வீசும் இதமான தென்றல் கூட சாதாரண சூழலைக் காட்டிலும் கொரோனா வைரஸ்களை அதிக தூரத்திற்கு, அதிக நேரத்திற்கு கடத்தும் என ஆய்வாளர்கள் புதிய தகவலை கூறி உள்ளனர். மும்பை ஐஐடியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய தென்றல் காற்று ஆய்வு குறித்து மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளியிடங்களில் எப்போது சென்றாலும், குறிப்பாக இதமான தென்றல் காற்று வீசும் சமயங்களில் கட்டாயம் மாஸ்க் அணிதல் வேண்டும். சாதாரண சூழல்களை விட தென்றல் காற்று வீசும் போது, தொற்றுள்ள ஒருவர் இருமினால் அவரிடமிருந்து வைரஸ் நீர்த்துளிகள் அதிக தூரத்திற்கு காற்று வீசும் திசையில் பரவும். மணிக்கு 5 மைல் வேகத்தில் தென்றல் வீசும் போது, வைரஸ் நீர்த்துளிகள் 20 சதவீதம் அதிக தூரத்தை எட்டும். அதாவது, 3-6 அடி என்பதிலிருந்து 3.6 முதல் 7.6 அடி வரை அதிக தூரத்திற்கு வைரஸ் பரவும். பலமான இருமல்களின் போது, அதிக தூரத்தை வைரஸ்கள் எட்டுவதோடு, அதிக நேரமும் காற்றில் உயிர்ப்புடன் இருக்கும் சாத்தியம் உள்ளது.எனவே, வெளியிடங்களில் இருமும் போது முழங்கையால் வாயை மூடிக் கொள்வது, முகத்தை கீழ்நோக்கி திருப்பி இருமுவது போன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இருமும் போது வைரஸ் தொற்றுள்ள நீர்த்துளிகள் சுழற்பந்து போல மாறி, தென்றல் வீசும் அதே திசையில் நீண்ட தூரத்திற்கு உயிர்ப்புடன் பரவும். எனவே மாஸ்க் அணிந்திருத்தில் வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும். எனவே, மெல்லிய தென்றல் காற்று கூட வைரசை கடத்தும். இவ்வாறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை