பிஎன்பி பாரிபா ஓபன்: காலிறுதியில் அசரெங்கா; கெர்பர் முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
பிஎன்பி பாரிபா ஓபன்: காலிறுதியில் அசரெங்கா; கெர்பர் முன்னேற்றம்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்கா தகுதி பெற்றார். 4வது சுற்றில் சக வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் (27 வயது, 100வது ரேங்க்) மோதிய அசரெங்கா (32 வயது, 32வது ரேங்க்) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 31 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சுடன் (29 வயது, 44வது ரேங்க்) மோதிய கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் 6-2, 1-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் 2 மணி, 34 நிமிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தனது 4வது சுற்றில் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அய்லா டாம்யானவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-1, 7-5 என்ற நேர் செட்களில் பார்போரா கிரெஜ்சிகோவாவையும், ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா) 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயாவையும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றனர். பிரேசில் வீராங்கனை ஹடாட் மாயாவுடன் மோதிய அனெட் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா) 6-0, 6-2 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். எலனா ஓஸ்டபென்கோ (லாட்வியா), ஜெஸ்சிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட முன்னணி வீரர்கள் டானில் மெட்வதேவ் (ரஷ்யா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), யானிக் சின்னர் (இத்தாலி), டியகோ ஷ்வார்ட்ஸ்மன் (அர்ஜென்டினா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை