கொரோனா பரவலை தடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விஜயதசமிக்கு வழிபாட்டு தலங்கள் திறப்பு?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பரவலை தடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விஜயதசமிக்கு வழிபாட்டு தலங்கள் திறப்பு?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் மீண்டும் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்தும், விஜயதசமியான நாளை மறுநாள் முதல் கோயில்கள் திறப்பு குறித்தும் முதல்வர் மு. க. ஸ்டாலின் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் ெகாண்டு வரப்பட்டாலும், அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டம் என்பது மிகவும் முக்கியமானது என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக, கொரோனா 3வது அலையின் தாக்கத்தால் மீண்டும் பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கும் வகையில், வழிபாட்டு தலங்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இருப்பினும் மற்ற நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்பதால், அந்த நாட்களில் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போதைய நிலையில் வழிபாட்டு தலங்களை திறப்பதால் மீண்டும் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழக அரசும் எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது.

இருப்பினும் பக்தர்கள் நலன்கருதி மாற்றுஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் நாளை ஆயுத பூஜை, வெள்ளிக்கிழமையன்று விஜயதசமி பண்டிகைகள் ெகாண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று முதல் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பஸ், ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

தொடர் விடுமுறை என்பதால், கோயம்பேடு பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் கிடைத்த வண்டியை பிடித்து ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் நாளை ஆயுதபூஜை என்பதால், சென்னையில் காய்கறி, பூ, பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இந்த சூழ்நிலையில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோயில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, வரும் வெள்ளிக்கிழமையன்று கோயில்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்தநிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியை ஒட்டி பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக கோயில்களை திறக்க அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, பள்ளிகளில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தினசரி 1300 கீழ் குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆயுதபூஜை, விஜயதசமி,  தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை ஒட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் திறக்கப்படுமா? அவ்வாறு திறக்கப்படும் நிலையில் என்ன மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து இன்று மாலை முறையான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை