தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 2வது நாளாக இன்றும் தொடர்கிறது: 9 மாவட்ட ஊராட்சி, 73 ஊராட்சிகளை திமுக கைப்பற்றி அபார சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 2வது நாளாக இன்றும் தொடர்கிறது: 9 மாவட்ட ஊராட்சி, 73 ஊராட்சிகளை திமுக கைப்பற்றி அபார சாதனை

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சி, 73 ஊராட்சி ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138ல் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் இரண்டு இடங்கள் மட்டுமே அதிமுகவுக்கு கிடைத்தது.

மற்ற இடங்களில் அதிமுக பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.



அதன்படி கடந்த 6ம் தேதி, 9ம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுக மற்றும் பாமக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் அவரவர் கட்சி சின்னத்தில் நேருக்கு நேர் போட்டியிட்டனர்.

அதன்படி, தேர்தல் நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140 ஆகும். மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 1381, மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 2,901, மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 22,581 ஆக இருந்தது.

இந்த இடங்களுக்கான தேர்தல்தான் கடந்த 6ம் தேதி மற்றும் 9ம் தேதி நடைபெற்றது.

இந்த 9 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் 2,981 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணும் பணிகள் தொடங்கியது.

இதில், ஆரம்பம் முதலே திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருந்தனர். நேற்று இரவு நிலவரப்படி, இதுவரை தமிழகத்தில் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றி பெற்றிருந்தது.

ஆனாலும், நேற்று நள்ளிரவுக்கு பிறகும் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தொடர்ந்து இன்று 2வது நாளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் இன்று காலை நிலவரப்படி 138 இடங்களில் திமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவுக்கு 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் மட்டுமே கிடைத்துள்ளது.

மற்ற இடங்களில் அதிமுக பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. இது அந்த கட்சிக்கு, இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் கிடைத்திராத தோல்வியாக கருதப்படுகிறது.

அதேபோன்று, தமிழகத்தில் போட்டியிட்ட பாமக, பாஜ, கமலஹாசனின் மக்கள் நீதி மையம், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவைகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது.

அதிமுக மட்டும்,  செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் தலா ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியை பிடித்துள்ளது.

அடுத்ததாக, 1,381 இடங்களில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சிலர் தேர்தலிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று பிற்பகல் நிலவரப்படி 1,010 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. இன்னும் பல இடங்களில் திமுக முன்னணியில் உள்ளது.

201 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று 2வது இடத்தில் உள்ளது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் 140 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளனர்.

அதன்படி, தமிழகத்தில் அதிக ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பிடித்துள்ளதால், மொத்தமுள்ள 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73 ஒன்றியங்களை திமுக கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் மட்டுமே இழுபறியில் உள்ளது.

அதேபோன்று, 2,901 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களே அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 2வது இடத்தில் அதிமுக இருந்தது.

22,581 இடங்களுக்கு நடைபெற்ற ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இதிலும், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.

2வது இடத்தில் அதிமுக ஆதரவு வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இறுதி முடிவுகள் இன்று மாலை அல்லது இரவு தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக மு. க. ஸ்டாலின் பதவியேற்றார்.

அவர், முதல்வராக பதவியேற்று 5 மாதங்களில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல், 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல், தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் சந்தித்தனர்.

இந்த மூன்று தேர்தல்களிலும் திமுக பிரமாண்ட வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

.

மூலக்கதை