இன்று 2வது தகுதிச்சுற்று.! சென்னையுடன் பைனலில் மோதப் போவது யாரு? டெல்லி-கொல்கத்தா பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
இன்று 2வது தகுதிச்சுற்று.! சென்னையுடன் பைனலில் மோதப் போவது யாரு? டெல்லிகொல்கத்தா பலப்பரீட்சை

ஷார்ஜா: ஐபிஎல் டி20 தொடரின் பைனலில் சென்னையுடன் மோதும் அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில், டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடர்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 ஆட்டங்கள்தான்  எஞ்சியுள்ளன. அதில் ஒன்றான 2வது தகுதிச் சுற்று ஆட்டம் இன்று ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. அதில்  ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ்,  இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மோத உள்ளன. லீக் சுற்றின் முடிவில்  முதல் இடம் பிடித்த டெல்லி, குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னையை எளிதில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையிடம் தோற்று  இன்று 2வது தகுதிச்சுற்றில் ஆட வேண்டிய நிலைமை. அதனால் முதலில் விட்டதை ஈடுகட்ட டெல்லி அணி இன்று வேகம் காட்டும். அதற்கேற்ப அணியிலும் மாற்றம் இருக்கலாம்.  ஆனால்  தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ், ரிஷப், ஹெட்மயர் என தொடக்க வரிசையில் மாற்றம்  இருக்க வாய்ப்பில்லை. பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் கடைசி வரிசை வீரர்களில் யாருக்காவது ஓய்வு கிடைக்கலாம். அதே நேரத்தில்  லீக் சுற்றில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்துதான் கொல்த்தாவுக்கு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு தகுதியான அணி என்பதை எலிமினேட்டரில் அபாரமாக விளையாடி பெங்களூரை வெளியேற்றி நிரூபித்தது. இப்போது வலுவான டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆனாலும் கொல்கத்தாவை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியில் ஷுப்மன், வெங்கேடஷ், நிதிஷ், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, தினேஷ் கார்த்திக்,  பெர்குசன் என பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுவான வீரர்கள் இருக்கின்றனர். இரு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

மூலக்கதை