நிலக்கரி பற்றாக்குறையால் பல மாநிலங்களில் மின்ெவட்டு; 115 அனல் மின்நிலையங்கள் மூடப்படும் அபாயம்?.. அமைச்சக அதிகாரிகளுடன் அமித் ஷா அவசர ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிலக்கரி பற்றாக்குறையால் பல மாநிலங்களில் மின்ெவட்டு; 115 அனல் மின்நிலையங்கள் மூடப்படும் அபாயம்?.. அமைச்சக அதிகாரிகளுடன் அமித் ஷா அவசர ஆலோசனை

புதுடெல்லி: நாடு முழுவதும் பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 115 அனல் மின் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சக அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

பஞ்சாப், மகாராஷ்டிரா, அசாம், குஜராத், ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அம்மாநிலங்களில் செயல்படும் அனல்மின் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது.

மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால், தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள 135 அனல் மின்நிலையங்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் அளவிற்கு நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதனால், 115 அனல்மின் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. பஞ்சாபில் தினமும் நான்கு மணி நேரம் மின்ெவட்டு ஏற்படுகிறது.

ஆந்திரா, தெலங்கானாவில் குறிப்பிட்ட இடங்களில் மின் வெட்டு தொடங்கியது.

ஜார்க்கண்ட்டில் 24 சதவீதம் வரை மின் பற்றாக்குறையை இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் 17 சதவீதமும், பீகாரில் ஆறு சதவீதமும் பற்றாக்குறை உள்ளது. மகாராஷ்டிரா நிலக்கரி பற்றாக்குறையால் 13 அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

பஞ்சாபில் மூன்று அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 5,620 மெகாவாட் உற்பத்தி திறனுக்கு பதிலாக, 2,800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.



நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக பல மாநில முதல்வர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், 1. 92 மெட்ரிக் டன் நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், 1. 87 மெட்ரிக் டன் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் நிலக்கரி துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி தெரிவித்தார். நிலக்கரி பற்றாக்குறை குறித்து சில மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் முன்கூட்டியே தெரிவித்து இருந்தும், நிலக்கரி இருப்பு வைப்பதில் ஒன்றிய அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.



சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்ததால், அதானி மற்றும் டாடா நிறுவனங்களின் இறக்குமதியை குறைத்துக் கொண்டன. இதனாலும், உள்நாட்டு மின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

இதுகுறித்து ஒன்றிய மின்சார ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நிலக்கரி பற்றாக்குறையால் 115 அனல்மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரி இருப்பு இயல்பை விட குறைவாக உள்ளது. அதே நேரத்தில் 17 மின் நிலையங்களில் கையிருப்பு இல்லை.

மின் நிலையங்களில் சராசரியாக 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

ஒன்றிய மின்துறை அமைச்சகம் தரப்பில், நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை  இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர், நிலக்கரி பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று எரிசக்தி மற்றும் நிலக்கரி துறை அமைச்சர்களுடன் நிலக்கரி  பற்றாக்குறை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது, நிலக்கரி பற்றாக்குறை, மின்விநியோகம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

.

மூலக்கதை