அடுத்தடுத்து தீபாவளி, மிலாடி நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை; கொரோனா பரவல் அச்சத்தால் ‘மிஷன் 100 நாட்கள்’- மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு புதிய அறிவுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடுத்தடுத்து தீபாவளி, மிலாடி நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை; கொரோனா பரவல் அச்சத்தால் ‘மிஷன் 100 நாட்கள்’ மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு புதிய அறிவுறுத்தல்


புதுடெல்லி: தீபாவளி, மிலாடி நபி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் கொரோனா பரவலை தடுக்க ‘மிஷன் 100 நாட்கள்’ என்ற திட்டத்தை பின்பற்ற மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ெதாற்று நேற்றைய நிலவரப்படி 2,30,971 பேர் தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 34 மாவட்டங்களில் 10 சதவீதம் அளவிற்கு கொரோனா பாசிடிவ் பாதிப்புகள் உள்ளன.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வாராந்திர பாசிடிவ் விகிதம் 5 சதவீதம் அல்லது அதற்கும் கீழாக குறைந்தால் மட்டுமே கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் இருப்பதாக கருதமுடியும். தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டு வந்தாலும் கூட, கொரோனா பரவல் சில மாநிலங்களில் தொடர்ந்து கொண்டே உள்ளன.

இந்நிலையில், அடுத்த சில நாட்களில் விஜயதசமி, தீபாவளி, மிலாடி நபி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், கொரோனா பரவலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் என்று அச்சப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.

அதேநேரம், அடுத்தடுத்த வாரங்களில் திருவிழாக்கள் வருவதால் பண்டிகை காலங்களில் முன்ெனச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாட அடுத்த 100 நாட்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு மாநில அரசுகளை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்.அப்போதுதான் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும். அக்டோபரில் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு திருவிழாக்கள் அடுத்தடுத்து வரவுள்ளன.

அப்போது தொற்றுநோயின் தினசரி பாதிப்பு மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சம் உள்ளது. எனவே, கொரோனா நெறிமுறைகளை  பின்பற்றி பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு  வேண்டுகோள் விடுத்துள்ளது.தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதால் தொற்று வேகமாக பரவுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, கூட்டு முயற்சியுடன் நோய் பரவுவதை தடுக்க வேண்டும்.

மேலும், தற்போதைய நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


.

மூலக்கதை