விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் முழு அடைப்பு: நாடு முழுவதும் காங். சார்பில் மவுன ேபாராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் முழு அடைப்பு: நாடு முழுவதும் காங். சார்பில் மவுன ேபாராட்டம்

மும்பை: மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் மவுன ேபாராட்டம் நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த வன்முறை சம்பவத்தில், 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து, மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் மோர்ச்சா (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடந்தது.

முக்கிய கோரிக்கையாக, லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழு அடைப்பு போராட்டத்தால் இன்று காலை முதலே பேருந்துகள் இயங்கவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டன.

ஆளும் கூட்டணி அரசு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால், பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. பள்ளி, கல்லூரிகளும் செயல்படவில்லை.

தாதர் உள்ளிட்ட பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான நவாப் மாலிக் கூறுகையில், ‘சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் விவசாயிகளுடன் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய பாஜக அரசு, வேளாண் சந்தையை கொள்ளையடிக்க மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது.

இப்போது அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் விவசாயிகளைக் கொன்று வருகின்றனர்.

அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கூறினார். அதேபோல், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மவுன போராட்டம் இன்று  நடைபெற்றது.

மாநில ஆளுநர் மாளிகை, ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக இந்த  போராட்டம் நடந்தது. உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த போராட்டத்தில்,  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.

மேலும், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து மாநில ஆளுநர் மாளிகை முன்பு மவுன போராட்டம் நடத்தினர்.

.

மூலக்கதை