பாதுகாப்பு வாகனம் மோதி 4 விவசாயிகள் பலி; ஒன்றிய அமைச்சர் மகன் போலீசில் ஆஜர்: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சரண் அடைந்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாதுகாப்பு வாகனம் மோதி 4 விவசாயிகள் பலி; ஒன்றிய அமைச்சர் மகன் போலீசில் ஆஜர்: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சரண் அடைந்தார்

லக்னோ: உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் பாதுகாப்பு வாகனம் மோதி 4 விவசாயிகள் பலியான  சம்பவத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து ஒன்றிய அமைச்சரின் மகன்  போலீசில் இன்று ஆஜரானார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சென்றனர்.

அப்போது, அவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர்.

அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். லக்கிம்பூர் கேரி வன்முறையைக் கண்டித்து உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் விவசாய அமைப்புகளின் அழைப்பின் பேரில் பல போராட்டங்கள் நடந்தன.மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு எதிர்கட்சிகளும் வலியுறுத்தின.இந்த சம்பவத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இருவர் கைது செய்யப்பட்டனர்.

அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீசார் நேற்றுமுன்தினம் சம்மன் அனுப்பினர். ஆனால், உடல்நிலை காரணமாகக் கூறி நேற்று ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை.

இதற்கிடையே போலீசார் தரப்பில், விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி ஆஷிஸ் மிஸ்ராவின் வீட்டில் நேற்று 2வது முறையாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதனிடையே, லக்கிம்பூர் விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒன்றிய அமைச்சரின் மகன் கைதுசெய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மற்ற கொலை வழக்குகளிலும் இதுபோன்றுதான் சம்மன் அனுப்பி குற்றவாளியை விசாரணைக்கு ஆஜராகச் சொல்வீர்களா? என கேள்வி எழுப்பினர். மேலும், லக்கிம்பூர் விவகாரத்தை உத்தரப்பிரதேச அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில், சில முக்கிய நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் குற்ற ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்திருக்க டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.   எந்த விசாரணை அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்றும்,  இது குறித்து உத்தரப்பிரதேச அரசு ஆலோசனை நடத்தி நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், உடல்நிலை காரணமாக விசாரணைக்கு தனது மகன் ஆஜராகவில்லை என்றும், சனிக்கிழமை (இன்று) ஆஜராவார் என்றும் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை 10. 30 மணிக்கு ஆஷிஸ் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜரானார். தொடர்ந்து குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், ஆஷிஷ் குமாரிடம் காலை 11 மணிக்கு விசாரணையை தொடங்கினர்.அப்போது, சம்பவம் நடந்த போது வெளியான வீடியோக்கள், துப்பாக்கியால் விவசாயியை சுட்டாரா? திட்டமிட்டு இந்த சம்பவம் நடத்தப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணைக்கு பின்னர், அமைச்சரின் மகன் கைது செய்யப்படுவார் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.


.

மூலக்கதை