உத்தரபிரதேச தேர்தலை மையப்படுத்தி பிரியங்காவின் பேரணி பெயர் திடீர் மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரபிரதேச தேர்தலை மையப்படுத்தி பிரியங்காவின் பேரணி பெயர் திடீர் மாற்றம்

பனாரஸ்: உத்தரபிரதேச தேர்தலை மையப்படுத்தி பனாரஸில் பிரியங்காவின் பேரணி பெயர் திடீரென மாற்றப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியை அகற்றுவதற்காக, அடுத்தாண்டுக்கான பேரவை தேர்தல் பணிகளை காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொடங்கியுள்ளார்.

இவர், வரும் 10ம் தேதி பனாரஸில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கிறார். இந்நிலையில், லக்கிம்பூர் கேரி வன்முறை விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு மீது கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் பிரியங்கா, பனாரஸில் பங்கேற்கும் பேரணியின் பெயரை மாற்றியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் பேரணிக்கு ‘காங்கிரஸ் உறுதிமொழி பேரணி’ என்று பெயரிடப்பட்டது.

ஆனால், தற்போது ‘கிசான் நயா பேரணி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய வடிவிலான சுவரொட்டிகள் தயார் செய்யப்பட்டு பனாரஸில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பழைய சுவரொட்டியில், பனாரஸ் தொகுதிக்கு தேவையான வசதிகள் குறித்து ஏழு வாக்குறுதிகள் இருந்தன.

ஆனால், புதிய சுவரொட்டியில் விவசாயிகள் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும். லக்கிம்பூர் கேரி படுகொலை சம்பவ வழக்கில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்.

மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுதல் வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.


.

மூலக்கதை