மலேரியாவுக்கு உலகின் முதல் தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மலேரியாவுக்கு உலகின் முதல் தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

லண்டன்: மலேரியா காய்ச்சலுக்கான உலகின் முதல் தடுப்பூசியை அனைத்து நாடுகளும் பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் நோய்களில் மலேரியா காய்ச்சலுக்கு முக்கிய இடம் உள்ளது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 4 லட்சம் பேர் மலேசியா காய்ச்சலினால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த நாடுகளில் மலேரியா காய்ச்சலால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதையடுத்து மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகளில் முன்னேறிய நாடுகள் தீவிரமாக இறங்கின.

கடந்த 1987ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரென்ட்போர்ட் நகரில் உள்ள கிளாஸ்கோ பார்மச்சூட்டிகல் நிறுவனத்தின் தலைமையகம், மலேரியாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால் தொடர்ந்து நடந்த பரிசோதனைகளில் இந்த தடுப்பூசியின் வீரியம் போதவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் ஆராய்ச்சிகளில் இறங்கிய நிபுணர்கள், இந்த தடுப்பூசியின் வீரியத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் முழு மூச்சாக ஈடுபட்டனர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு தடுப்பூசியின் வீரியம் அதிகரிக்கப்பட்டு, அதே வேளையில் முடிந்த அளவு பக்க விளைவுகளையும் குறைத்து, மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை வெற்றிகரமாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு முதல் சப்-சஹாரா, கானா, கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள், சிறுமிகளுக்கு படிப்படியாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இவர்களில் 80 சதவீதம் பேர் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிறுவர், சிறுமிகள் 24 மணி நேரமும் மருத்துவ நிபுணர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்தனர்.

இதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் பல்வேறு குழுக்கள், நேரடியாக இந்த நாடுகளுக்கு சென்று முகாமிட்டனர். இதில் இந்த தடுப்பூசி நம்பகமானது என்று அறியப்பட்டது.

இதையடுத்து இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்து, நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அறிவியல் கண்ணோட்டத்தில் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இது வெற்றிகரமான படி என்றே கூற வேண்டும்.

‘ஆர்டிஎஸ், எஸ்/ஏஎஸ்01’ என்ற இந்த மலேரியா நோய் எதிர்ப்பு தடுப்பூசியை உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் உயிர்க்கொல்லி நோய்களை தடுப்பதற்கான ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் கேட் ஓ பிரென் கூறுகையில், ‘‘இந்த தடுப்பூசி, உலகம் முழுவதும் கொசு வலைக்குள் தூங்க முடியாத, வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு மிகமிக பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை மலேரியாவால் உயிரிழக்கிறது.

அந்நாடுகளுக்கு இந்த தடுப்பூசி, மிக அவசியமான ஒன்று.

இதில் உள்ள மருந்து, மலேரியாவில் உள்ள உயிர்க்கொல்லி கிருமிகளை வெகுவாக அழித்து விடும் என்பதால் உயிரிழப்புகள் 70 சதவீதம் அளவு குறையும்’’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை