திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: இன்று மாலை கொடியேற்றத்துடன் துவக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: இன்று மாலை கொடியேற்றத்துடன் துவக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று அங்குரார்ப்பணம் மற்றும் விஷ்வ சேனாதிபதி உற்சவம் நடந்தது.

கலியுக தெய்வமான சீனிவாச பெருமாளுக்கு முதலில் பிரம்ம தேவன் உற்சவத்தை நடத்தியதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெறும் விதமாக நடத்தப்படுகிறது.

அதன்படி புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம் (வரும் 15ம்தேதி) என்பதால் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவம் வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

9 நாட்களும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்தி தாயார்களுடன் எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று அங்குரார்ப்பணம் நடைபெற்றது. சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வசேனாதிபதி மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு புற்றுமண் சேகரிக்கப்பட்டு கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானியங்கள் விதைத்து அங்குரார்ப்பணம் நடந்தது.

இதையடுத்து இன்று மாலை 5. 10 முதல் 5. 30 மணி இடையே ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. இதையடுத்து முதல் உற்சவமாக இன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

2ம் நாளான நாளை (8ம் தேதி) காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 9ம்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 10ம்தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 11ம்தேதி காலை மோகினி அவதாரம், இரவு கருட சேவை, 12ம்தேதி காலை அனுமந்த வாகனம், மாலை தங்க ரதத்திற்கு மாற்றாக சர்வ பூபால வாகனம், இரவு கஜ வாகனம், 13ம்தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திரபிரபை வாகனம், 14ம்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டத்திற்கு மாற்றாக சர்வ பூபால வாகனம், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான வரும் 15ம்தேதி காலை 6 மணி முதல் 8 வரை பல்லக்கு உற்சவம், காலை 8 மணி முதல் காலை 11 மணிக்கு இடையே திருமஞ்சனம் மற்றும் அயன மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.

இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் பிரம்மோற்சவ கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்று திருச்சு உற்சவம் நடைபெற உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பிரம்மோற்சவத்தில் சுவாமி நான்கு மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

பிரம்மோற்சவத்திற்காக திருப்பதி மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் விதமாக மலர்களாலும் வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் திருமலை முழுவதும் கலியுக வைகுண்டமாக காட்சியளிக்கிறது.

ஆனால் பக்தர்களுக்கு சுவாமியை நேரில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.   இதற்கிடையில் இலவச தரிசன டிக்கெட், ரூ. 300 தரிசன டிக்கெட், கல்யாண உற்சவ டிக்கெட், விஐபி தரிசன டிக்கெட் உள்ளிட்டவை வரும் 30ம்தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை