உத்தரபிரதேச வன்முறையில் 9 பேர் பலியான நிலையில் மோடிஜி... கொலையாளிகளை கைது செய்யாதது ஏன்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரபிரதேச வன்முறையில் 9 பேர் பலியான நிலையில் மோடிஜி... கொலையாளிகளை கைது செய்யாதது ஏன்?

லக்னோ: உத்தரபிரதேச வன்முறையில் 9 பேர் பலியான நிலையில், தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்யாதது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், அவர் வெளியிட்ட பயங்கர வீடியோவில் விவசாயிகளை கார் ஏற்றிக் கொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் விவசாயிகள், பாஜக  தொண்டர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் ஒன்றிய  அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துப்பாக்கிச் சூடு  நடத்தியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவரது காரை ஏற்றி  விவசாயிகளை கொன்றதாக கூறும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சியும்,  அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் தங்களது டுவிட்டர்  பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், திகுனியாவில் சாலையின் இருபுறமும் நின்றிருந்த விவசாயிகள், துணை முதல்வருக்கு எதிராக கறுப்பு கொடியேந்தி கோஷமிட்டுள்ளனர். அப்போது பாஜக தொண்டர்களின் கார் அணிவகுப்பு ஒன்று அவ்வழியாக செல்கிறது.

அணிவகுப்பு கார்களில் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது.

சாலையில் நிற்கும் விவசாயிகளின் பின்புறம் வழியாக வேகமாக வந்த மற்றொரு கார், அவர்கள் மீது ஏற்றிவிட்டு நிறுத்தாமல் செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன.

இந்த வீடியோவை டுவிட்டரில் பலரும் பகிர்ந்துவருகின்றனர். அந்த வீடியோ பார்ப்பவர்களைப் பதறச் செய்யும் வகையில் உள்ளது.

இந்த வீடியோ தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘மோடிஜி, உங்களது அரசு என்னை கடந்த 28 மணி நேரமாக தடுத்து வைத்துள்ளது. ஆனால், விவசாயிகளை கொன்ற நபரை இதுவரை கைது செய்யாதது ஏன்?’ என்று கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட மற்றொரு வீடியோ பதிவில், ‘யோகி ஆதித்ய நாத்ஜி, விவசாயிகளை கொடூரமாக கொன்றவர்களை எப்போது கைது செய்வீர்கள்? கடந்த 30 மணி நேரமாக, என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் போலீஸ் காவலில் வைத்துள்ளீர்கள்.

ஆனால் கொலையாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இதுதான் உங்களது நீதியின் கொள்கையா?’ என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா, சஞ்சய் சிங் பகிர்ந்த வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து அரசின் தரப்பில் எவ்வித விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை