7 மணி நேரம் சமூக வலைதளங்கள் முடங்கியதால் பேஸ்புக் நிறுவனத்துக்கு ₹52,000 கோடி இழப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
7 மணி நேரம் சமூக வலைதளங்கள் முடங்கியதால் பேஸ்புக் நிறுவனத்துக்கு ₹52,000 கோடி இழப்பு

புதுடெல்லி: நேற்றிரவு முதல் 7 மணி நேரம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள முடக்கத்தால் பேஸ்புக் நிறுவனத்துக்கு மட்டும் ரூ. 52,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகழ்பெற்ற சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றின் சேவைகள் அவ்வப்போது முடக்கப்படுவதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு மேல் இந்தியா உள்பட பல நாடுகளில் திடீரென சமூக வலைத்தளங்கள் முடங்கின.

குறிப்பாக பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவை முழுமையாக செயல்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.

தொடர்ந்து 7 மணி நேர முடக்கத்துக்கு பின்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன.

இருப்பினும், இந்த திடீர் முடக்கத்திற்கான காரணம் என்ன  என்பது குறித்து கண்டறியப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திடீர்  துண்டிப்பு பிரச்னையை சரிசெய்ய முயற்சிப்பதாக கூறினாலும் கூட, சிலர் இந்த  திடீர் முடக்கத்தை ‘சைபர்’ தாக்குதலாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து  வருகின்றனர்.

இதுகுறித்து பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்  ஜுக்கர்பெர்க் கூறுகையில், ‘பேஸ்புக் சமூக வலைதளம் தானாக முடங்கியது.   தற்போது அனைத்து சேவைகளும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. மக்களுக்கு  ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.

நீங்கள் எங்களை நம்புகிறீர்கள்;  எங்களது சேவையை நம்புகிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி’ என்று  தெரிவித்துள்ளார்.

இதேபோல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களும்  தெரிவித்துள்ளன.

பேஸ்புக் நிறுவனத்தின் 7 மணி நேர முடக்கத்தால், அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், தனது சொத்து மதிப்பில் 7 பில்லியன் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 52 ஆயிரம் கோடி) டாலரை இழந்துள்ளார். இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் அதாவது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

நேற்று மட்டும் பங்கு சந்தையில் 4. 9 சதவீதம் அளவுக்கு பேஸ்புக் நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. செப்டம்பர் பாதிக்குப் பிறகு அந்நிறுவனங்களின் பங்குகள் 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.   மார்க் ஜுக்கர்பெர்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலரில் இருந்து 121. 6 பில்லியன் டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இணைய சிக்கல்களைக் கண்காணிக்கும் டவுன்டாடெக்டர் வெளியிட்ட அறிக்கையில், பேஸ்புக் போன்ற சமூக வலைதளபக்கங்கள் முடக்கத்தால் 10 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள், ‘சர்வர் டவுன்’ புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை