சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ புதிய பாடத்திட்டத்தை மாற்ற இயலாது: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ புதிய பாடத்திட்டத்தை மாற்ற இயலாது: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ புதிய பாடத்திட்டத்தை மாற்ற இயலாது என சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்விற்கான பாடத்திட்டங்கள் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டிருப்பதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 41 முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிட்டதற்கு பிறகு பாடத்திட்டங்களை மாற்றியது ஏன்? இந்த மாற்றத்தை அடுத்த ஆண்டு ஏன் மேற்கொள்ள முடியாது? சில மாதங்களே தேர்வுக்கு இருக்கும் நிலையில் மாணவர்கள் இதற்கு எப்படி தயாராவார்கள்? அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இளம் மருத்துவர்களை கால்பந்தை போல கருதாதீர்கள்’ என்று கடிந்து கொண்டனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று ஒன்றிய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய பாடத்திட்டங்கள் மாற்றத்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களை மாற்ற இயலாது. இதன்மூலம் நீட் மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாது.

தேர்வுகளை வரும் நவம்பர் மாதத்திற்கு பதிலாக அடுத்தாண்டு ஜனவரி 10, 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நடத்த முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

.

மூலக்கதை