அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள், தூதர்கள் உட்பட 300 இந்திய பிரபலங்கள் வெளிநாட்டில் சொத்து குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள், தூதர்கள் உட்பட 300 இந்திய பிரபலங்கள் வெளிநாட்டில் சொத்து குவிப்பு

வாஷிங்டன்: இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு வெளி நாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் ரகசிய சொத்துகளும் நிறுவனங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பானது, ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் புலனாய்வு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில், ‘உலகம் முழுவதும் 117 நாடுகளில் உள்ள 150 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 600க்கு மேற்பட்ட செய்தியாளர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் ெதாடர்பான தகவல்களை சேகரித்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், 1. 19 கோடி ரகசிய ஆவணம் மற்றும் கோப்புகள் கிடைத்துள்ளன.

கிட்டத்தட்ட 956 நிறுவனங்களின் ரகசிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், 91 நாடுகளைச் சேர்ந்த 336 அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், முக்கியத் தலைவர்கள், தூதர்கள் ஆகியோருக்கு குறிப்பிட்ட நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது சகோதரி, தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியதும் தெரியவந்துள்ளது. ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், கென்யா ஜனாதிபதி உஹுரு, பாப் இசை பாடகி ஷகிரா உள்ளிட்டோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பட்டியலில் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்பட 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும்  தனி நபர்களுக்கு வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள்  இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த விரிவான விவரங்கள் விரைவில்  வெளியாகும் எனத் தெரிகிறது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஊடகத்தில் வெளியானது.   சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டது.

இதில், திரைப்பட நட்சத்திரங்கள்  ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், டிஎல்ஃப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய ஒன்பது குடும்ப உறுப்பினர்கள்,  கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை