ஐபிஎஸ் போன்ற போலீஸ் அதிகாரிகளின் அத்துமீறலை விசாரிக்க ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் சிறப்பு குழு?: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் கருத்தால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎஸ் போன்ற போலீஸ் அதிகாரிகளின் அத்துமீறலை விசாரிக்க ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் சிறப்பு குழு?: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் கருத்தால் பரபரப்பு

புதுடெல்லி: போலீஸ் அதிகாரிகளின் அட்டூழியம், அத்துமீறல் புகாரை விசாரிக்க ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் சிறப்பு குழு அமைக்க தான் விரும்பியதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆவேசமாக கூறினார். சட்டீஸ்கர் மாநில போலீஸ் ஏடிஜிபி குர்ஜிந்தர் பால் சிங் மீது சட்ட விரோதமாக சொத்து அபகரிப்பு, மிரட்டி பணம் பறித்தல், தேசத்துரோகம் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் சம்பந்தப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்நிலையில், அதிலிருந்து நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் குர்ஜிந்தர் பால் சிங் முறையீடு செய்திருந்தார்.

இம்மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி என். வி. ரமணா கூறுகையில், ‘போலீஸ் அதிகாரிகளின் நடத்தை மற்றும் அணுகுமுறை மீது எனக்கு நிறைய ஆட்சேபனைகள் உள்ளன.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்களில் காவல்துறை அதிகாரிகள் மீது நிறைய புகார்கள் வருகின்றன. அவர்களின் அட்டூழியம், அத்துமீறல்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக அவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். அவர்களால் பாதிக்கப்படுவோரின் புகார்களை விசாரிக்க ஒரு சிறப்பு குழுவை உருவாக்க விரும்பினேன்.

இந்த குழுவிற்கு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் செயல்பட வேண்டும் என்று விரும்பினேன்.

ஆனால், சில வரம்புகள் மற்றும் விதிமுறைகளின் காரணமாக நிலைக்குழு அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

​​ஒவ்வொரு விசாரணையின் போதும், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி குர்ஜிந்தரை கைது செய்வதற்கு மாற்றாக, அவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. காவல்துறை அதிகாரியாக இருப்பவர், குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்து இருந்தால், அவர்களது ஆட்சி அமையும் போது அவருக்கு சாதகமான செயல்களை செய்து கொள்கிறார்.

இல்லாவிட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது நடைமுறையானது, ஆட்சி, அரசியலில் ஒரு புதிய போக்காக மாறியுள்ளது; இதுபோன்ற முறைகள் நிறுத்தப்பட வேண்டும்’ என்றார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணாவின் இந்த கருத்து சட்ட நிபுணர்களின் மத்தியில் முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுகிறது.


.

மூலக்கதை