புதியதாக உருவாக்கப்பட்ட அமைச்சகம்; நாளை கூட்டுறவு துறை முதல் மாநாடு: துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

தினகரன்  தினகரன்
புதியதாக உருவாக்கப்பட்ட அமைச்சகம்; நாளை கூட்டுறவு துறை முதல் மாநாடு: துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசில் புதியதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகத்தின் கூட்டுறவு துறை முதல் மாநாடு நாளை டெல்லியில் நடைபெறுகிறது. அதில், அத்துறையின் அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தவும், நிர்வாக, சட்டம்  மற்றும் கொள்கை கட்டமைப்பை உருவாக்கவும், பல மாநில கூட்டுறவு சங்கங்களின்  (எம்.எஸ்.சி) வளர்ச்சிக்கு உதவும் வகையில், இந்த அமைச்சகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில், கூட்டுறவு சங்கங்களுக்கான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இஃப்கோ, இந்திய தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு, அமுல், சஹாகர் பாரதி, நாஃபெட், கிரிப்கோ ஆகிய கூட்டுறவு அமைப்புகள் பங்கேற்கின்றன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒன்றிய கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா, முதன்முறையாக கூட்டுறவு அமைச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் துறைசார்ந்த செயல்பாடுகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 2,000 உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். சர்வதேச கூட்டுறவு கூட்டணியுடன் (குளோபல்) தொடர்புடைய 110 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் கூட்டுறவு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்படும் என்று இஃப்கோ அதிகாரி கூறினார்.

மூலக்கதை