தமிழகத்தில் இருந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் மோடி சந்திப்பு: இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் அழைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் இருந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் மோடி சந்திப்பு: இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் அழைப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார்.   அப்போது அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்து அவரை பாராட்டினார். கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இன்று குவாட் உச்சி மாநாட்டில் பேசுகிறார்.
ஐ. நா பொதுச்சபை கூட்டம், குவாட் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்குள்ள இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்க தொழிலதிபர்களை நேற்று சந்தித்த மோடி, இந்திய நேரப்படி நேற்றிரவு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தார். இருநாடுகளுக்கிடையிலான வணிகம், பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத ஆற்றல் உருவாக்கம் குறித்தும் ஸ்காட் மோரிசனிடம் மோடி கலந்துரையாடினார்.

பின்னர், தமிழகத்தில் இருந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12. 45 மணிக்கு பிரதமர் மோடி  சந்தித்தார்.

அப்போது பேசிய மோடி, ‘இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள்.

ஒருமித்த மதிப்புகள்,  ஒரேமாதிரியான புவிசார்ந்த அரசியல் நலன்கள் இரு நாடுகளுக்கும் இருக்கின்றன.   இந்தியாவும் அமெரிக்காவும் மிகப்பெரிய மற்றும் பழமையான ஜனநாயகத்தைக்  கொண்டவை. இரு நாடுகளும் உயர்ந்த மதிப்புகளையும் பகிர்ந்து கொண்டு,  கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பையும் படிப்படியாக அதிகரித்துள்ளன.

கமலா ஹாரிஸ்  உலகெங்கும் உள்ள மக்களுக்கு உத்வேகமாகத் திகழ்கிறார். அதிபர் ஜோபிடன்,  துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையின் கீழ் இந்தியா, அமெரிக்கா உறவு புதிய  உச்சத்தைத் தொடும் என்று நான் நம்புகிறேன்.

அமெரிக்க அதிபராக ஜோ பிடனும்,  துணை அதிபராக நீங்களும் பொறுப்பேற்றபோது கடினமான சவால்களைச்  சந்தித்தீர்கள்.

குறுகிய காலத்தில் உங்கள் அரசு பல சாதனைகளைச் செய்துள்ளது.   குறிப்பாக கொரோனாவைக் கட்டுப்படுத்துதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றில்  முடிவெடுத்தமைக்கு உங்களுக்கு பாராட்டுகள். கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோர் வருகையை இந்தியா எதிர்நோக்கியுள்ளது’ என்றார்.

தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், ‘அமெரிக்காவின் மிகமுக்கிய பங்காளராக இந்தியா திகழ்கிறது. கொரோனா காலகட்டத்தில் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதில் இந்தியா மிகமுக்கிய பங்காற்றியது.இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தியாவில் தினமும் சராசரியாக ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடுவது வியப்பளிக்கிறது’ என்றார்.

தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் கண்டுபிடிப்பில் எவ்வாறு பங்களிப்பை அதிகரிப்பது என்பது தொடர்பாகவும் தலைவர்கள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டது. அதன்பின், ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவை சந்தித்த பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை குறித்து விவாதித்தார்.மேலும், சீனாவின் அத்துமீறல்களை மையப்படுத்தி இருநாடுகளுக்கு இடையேயுள்ள நல்லுறவு, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே, வாஷிங்டனில் குவால்காம் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல்  அதிகாரியுமான கிறிஸ்டியானோ ஆர். ஆமன், பிரதமர் மோடியுடன் ஆலோசனை  நடத்தினார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,  ‘மோடி - ஆர். ஆமன் இடையே பயனுள்ள விவாதம் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.

 

5ஜி மற்றும் பிற டிஜிட்டல் இந்தியா முயற்சிகள் போன்ற துறைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கிறிஸ்டியானோ கூறினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8. 30 மணிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார்.

தொடர்ந்து ெபரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘குவாட்’ உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்றிரவு 11. 30 மணிக்கு நடைபெறுகிறது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் இருதரப்பு பேச்சு நடத்துகிறார்.

அப்போது, இருதரப்பு மற்றும் சர்வதேச நிலவரங்கள், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அமைத்துள்ள ‘குவாட்’ அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அதன்பின், ஐ. நா பொது சபையின் 76வது கூட்டத்தில் நாளை உரையாற்றுகிறார். இதையடுத்து, தனது பயணத்தை முடித்துவிட்டு இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்ப உள்ளதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கமலா ஹாரிசின் சொந்த ஊர்
அமெரிக்காவில் துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிசின் (56) சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் என்ற கிராமமாகும்.

கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவராவர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை