ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்

தரங்: அசாம் மாநிலம் தரங் மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். அசாம் மாநிலம் தரங் மாவட்டம் தால்பூர் பகுதியில் வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள், சுமார் 2 ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்திருந்தனர்.

அந்த நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களுக்கு பயன்படுத்த அசாம் மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கியது.



அப்போது, 800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த ஆயிரத்து 487 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

அப்போது, போலீசாரை நோக்கி கட்டையை தூக்கிக் கொண்டு வந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டதுடன், லத்தியால் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர்.

காவலர்கள் தரப்பில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மாநில அரசு, வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கை சிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். அசாமில் தொடர் பதற்றம் நிலவி வருவதால், தால்பூர் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து அசாமின் பாஜக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் தம்பி சுஷாந்த பிஸ்வா சர்மா, தரங் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வருவதால், அவரது உத்தரவின் அடிப்படையில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், தால்பூர் சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மாநில அரசே வன்முறையை தூண்டிவிட்டுள்ளது. அசாம் மாநில சகோதர, சகோதரிகளுக்கு நான் உறுதுணையாக இருப்பேன்; எந்த ஒரு குழந்தைக்கும் இதுபோன்ற சூழல் ஏற்படக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மிருகமாக மாறிய கேமராமேன்
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் நடந்தது.

போலீசார் பொதுமக்கள் மீது லத்தி சார்ஜ் நடத்தினர். அப்போது, தாக்குதலில் காயமடைந்த சிலர் சுய நினைவை இழந்து சம்பவ இடத்திலேயே கிடந்தனர்.

இதற்கிடையே இந்த வன்முறை சம்பவங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பத்திரிகை கேமராமேன்  பிஜோய் போனியா என்பவர், காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ஒருவரின் கழுத்தில் காலை வைத்து நசுக்கியும், அவரை மிதித்தும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானது.

அதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட கேமராமேன்  பிஜோய் போனியாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேமராமேனின் செயலை, சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

முதல்வர் விளக்கம்
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில், ‘அரசின் உத்தரவின்படி காவல்துறையினர் அவர்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களை அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள மக்கள் கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு முதலில் தாக்கியிருக்கின்றனர். அதற்கு பிறகே, காவலர்கள் துப்பாக்கிகளைக் கையில் எடுத்திருக்கின்றனர்.

எனவே, ஆக்கிரமிப்பு அகற்றப் பணி தொடர்ந்து நடைபெறும்’ என்றார். தொடர்ந்து மாவட்ட எஸ்பி சுஷாந்த பிஸ்வா சர்மா இந்த  சம்பவம் குறித்துக் கூறுகையில், ‘9 போலீசார் படுகாயமடைந்திருக்கிறார்கள்.   பொதுமக்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது கிராமத்தில் நிலைமை சீராக  இருக்கிறது.

மக்கள் போராட்டத்தால் நாங்கள் தற்போது பின்வாங்குகிறோம்.   ஆனால், மீண்டும் எங்களின் ஆக்கிரமிப்பு அகற்றப் பணி தொடரும்’ என்றார்.

.

மூலக்கதை