உத்தரபிரதேச அரசுக்கு என் மீது அதிருப்தி... உணவில் விஷம் கலந்து கொன்றுவிடுவார்கள்! - சிறையில் அடைக்கப்பட்ட எம்எல்ஏ நீதிபதியிடம் கதறல்

தினகரன்  தினகரன்
உத்தரபிரதேச அரசுக்கு என் மீது அதிருப்தி... உணவில் விஷம் கலந்து கொன்றுவிடுவார்கள்!  சிறையில் அடைக்கப்பட்ட எம்எல்ஏ நீதிபதியிடம் கதறல்

லக்னோ: பல்வேறு குற்றவழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரபிரதேச மாநில எம்எல்ஏ, தனக்கு வழங்கப்படும் உணவில் விஷம் வைத்து கொன்றுவிடுவார்கள் என்று நீதிபதியிடம் தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏவான முக்தார் அன்சாரி, பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொலை, ஆள்கடத்தல் மற்றும் மதக்கலவரம் தூண்டுதல் உட்பட பல்வேறு குற்றங்களில் சிக்கிய அன்சாரி கடந்த 2005 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடி மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டார். கடந்த 2017ம் ஆண்டு மீண்டும் மாயாவதியின் பகுஜன் சமாஜில் இணைந்தவர், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு அருகிலுள்ள மாவ் மாவட்டத்தின் முகம்மதாபாத்தின் எம்எல்ஏவாக தேர்வானார். இவர் மீது பஞ்சாபிலும் ஆள்கடத்தல் வழக்கு உள்ளது. அதனால் இரண்டு வருடங்களுக்கு முன் வழக்கின் விசாரணைக்காக பஞ்சாபின் ரோபட் சிறைக்கு மாற்றப்பட்டார். அப்போது, இவரை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் பதிவெண் மோசடி வழக்கில், தற்போது உத்தரபிரதேசத்தின் பாந்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு உயர்மட்ட பாதுகாப்பை வழங்குமாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் ரந்தீர் சிங் சுமன் கூறுகையில், ‘ஆளும் பாஜக அரசு மனுதாரர் (முக்தார் அன்சாரி) மீது அதிருப்தியில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, உணவில் விஷம் கலந்து கொடுக்க வாய்ப்புள்ளதாக அவர் கருதுகிறார். அதனால், தனக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த விசாரணையை அக். 7ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது’ என்றார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விசாரணையின்போது, சிறைக்குள் தன்னைக் கொல்வதற்காக ரூ.5 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் முறையிட்டார். தற்போது, தனக்கு வழங்கப்படும் உணவில் விஷம் கலந்து கொல்ல மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை