சிறந்த கேப்டன் ரிஷாப் பன்ட்: ஸ்ரேயாஸ் பாராட்டு | செப்டம்பர் 23, 2021

தினமலர்  தினமலர்
சிறந்த கேப்டன் ரிஷாப் பன்ட்: ஸ்ரேயாஸ் பாராட்டு | செப்டம்பர் 23, 2021

துபாய்: ‘‘ரிஷாப் பன்ட் கேப்டனாக தொடர வேண்டும் என்ற டில்லி அணி நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன்,’’ என, ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26, ஐ.பி.எல்., தொடரின் 13 வது சீசனில் டில்லி அணிக்கு கேப்டனாக இருந்தார். அணியை  பைனல் வரை அழைத்துச் சென்றார். கடந்த மார்ச் மாதம் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ‘பீல்டிங்’ செய்த போது இவரது தோள்பட்டை பகுதியில் காயமடைய, ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார்.

இதனால், 14வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் ரிஷாப் பன்ட் கேப்டனாக களமிறங்கினார். இந்தியாவில் நடந்த முதல்கட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது டில்லி. இதனிடையே காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் அணிக்கு திரும்பினார். இருப்பினும்  டில்லி அணி கேப்டனாக ரிஷாப் பன்ட் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.

ஐதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய ஸ்ரேயாஸ், 47 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். இதுகுறித்து ஸ்ரேயாஸ் கூறுகையில், ‘‘டில்லி அணியை ரிஷாப் பன்ட் சிறப்பாக வழிநடத்துகிறார். இவர் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்ற அணி நிர்வாகத்தின் முடிவுக்கு மதிப்பளிக்கிறேன். போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை விரும்புகிறேன். அப்போது தான் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் என்னால் சிறப்பாக செயல்பட முடிகின்றது. இது தான் என் மனநிலை. காயத்தில் இருந்து மீண்டு போட்டிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. புள்ளிப்பட்டியலில் டில்லி அணி முதலிடத்தில் நீடிக்க விரும்புகிறேன்,’’ என்றார்.

மூலக்கதை