குவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் வரவேற்பு: இன்று கமலா ஹாரிஸை சந்திக்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் வரவேற்பு: இன்று கமலா ஹாரிஸை சந்திக்கிறார்

வாஷிங்டன்: குவாட் மாநாடு, ஐ. நா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை ஆன்ட்ரூஸ் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். அமெரிக்காவில் நடைபெறும் குவாட் மாநாடு, நியூயார்க்கில் நடக்கும் 76வது ஐ. நா.

பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று ெடல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்டு சென்றார். கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 7வது முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இதுவரை குவாட் மாநாட்டில் காணொலி மூலம் உலகத் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, முதல்முறையாக நேரடியாக ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்க அதிபர்களை சந்தித்து பேசவுள்ளார். மேலும், அடுத்துவரும் நாட்களில் அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.

 

முன்னதாக இன்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வாஷிங்டன் நகருக்கு வந்துவிட்டேன். அடுத்த 2 நாட்களில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரதமர்கள் ஸ்காட்மோரிஸன், சுகா ஆகியோர்களைச் சந்திக்க இருக்கிறேன்.

குவாட் மாநாட்டில் பங்ேகற்று, இந்தியாவுக்கான பல்வேறு பொருளாதார வாய்ப்புகள் குறித்து பெருநிறுவனங்களுடன் பேச உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக  மோடி வாஷிங்டன் நகரம் வந்து இறங்கியபோது, கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது.

இருந்தாலும், மழையைப் பொருட்படுத்தாமல் ஏராளமான இந்திய மக்கள், பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நமஸ்தே அமெரிக்கா! அமெரிக்கா வந்து சேர்ந்த பிரதமர் மோடிக்கு இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து வாழ்த்துகளுடன் வரவேற்றார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரையன் மெக்கானும் பிரதமர் மோடியை வரவேற்றார்.

மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான அமெரிக்கவாழ் இந்தியர்கள் மோடியை ஆன்ட்ரூஸ் விமான நிலையத்தில் வரவேற்றனர்’ என்று கூறியுள்ளார். மோடியின் இன்றைய நிகழ்ச்சி நிரலில், வாஷிங்டனில் குவால்காம், அடோப் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கிறார்.

இரவு 11 மணியளவில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்திக்கிறார். இந்திய வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை, பிரதமர் மோடி இன்றிரவு (செப்.

23) சந்தித்துப் பேசுகிறார். நாளை அமெரிக்க அதிபர் ஜோ பிடனை பிரதமர் மோடி நேரடியாகச் சந்திக்கிறார்.

அன்று நடக்கும் குவாட் மாநாட்டில் ஜப்பான் பிரதமர் யோஷிஹேட் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோரையும் பிரதமர் மோடி நேரடியாகச் சந்திக்க உள்ளார். குவாட் மாநாட்டில் முதல்முறையாக உலகத் தலைவர்களை நேரடியாகச் சந்திக்கும் முதல் பிரதமரும் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் (செப். 25) ஐ. நா சபையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அதன்பின், அவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்புகிறார்.


.

மூலக்கதை